கேரள மாநில சி.பி.ஐ செயலாளராக இருந்த கானம் ராஜேந்திரன், இன்று மரணமடைந்தார். கானம் ராஜேந்திரன், 2015-ம் ஆண்டு முதல் கேரளா மாநில சி.பி.ஐ செயலாளராக இருந்தார். விபத்து காரணமாக அவருடைய இடது காலில் காயம் ஏற்பட்டிருந்தது. சர்க்கரைநோய் இருந்ததைத் தொடர்ந்து காயம் ஆறாமல், இருந்துவந்தது. கிருமித் தொற்று ஏற்பட்டதைத் தொடந்து அவரின் இடது காலை அகற்றும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் கொச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கானம் ராஜேந்திரனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, இன்று (டிச.8) மரணமடைந்தார். சிகிச்சைக்காக கட்சிப் பணியிலிருந்து மூன்று மாதங்கள் விடுப்பு வேண்டும் என தேசியத் தலைமைக்கு நேற்று கடிதம் எழுதியிருந்த நிலையில், இன்று மரணமடைந்தார். அவருக்கு வனஜா என்ற மனைவியும், சந்தீப், ஸ்மிதா ஆகிய இரண்டு பிள்ளைகளும் இருக்கின்றனர். கோட்டயம் மாவட்டம், கானம் கிராமத்தில் 1950, நவம்பர் 10-ம் தேதி பிறந்தார். தந்தை வி.கே.பரமேஸ்வரன் நாயர், தாய் டி.கே.செல்லம்மா. தந்தை எஸ்டேட் மேலாளராக இருந்ததால், தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் நிலையை நேரில் கண்டு வளர்ந்தார்.

1968-ல் மாணவர் பருவத்திலிருந்தே அரசியலில் இணைந்து செயல்பட்டார். தனது 20-வது வயதில் ஏ.ஐ.ஒய்.எஃப் மாநிலச் செயலாளராகவும், 21 வயதில் சி.பி.ஐ மாநில கவுன்சிலிலும் சேர்ந்தார். 1975-ல் சி.பி.ஐ மாநிலக்குழு உறுப்பினராகப் பொறுப்பு வகித்தார். 1982, 1987 சட்டசபைத் தேர்தல்களில் கோட்டயம் வாழுர் தொகுதியில் எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கானம் ராஜேந்திரன் மறைவுக்கு, இடதுசாரித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

கேரள முதல்வர் பினராயி விஜயன், `இடதுசாரி அமைப்புகளின் ஒற்றுமைக்கு வலுவான தூணாக விளங்கிய கானம் ராஜேந்திரனை இழந்துவிட்டோம். கானம் ராஜேந்திரனின் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. கம்யூனிஸ்ட் இயக்கத்தை வலுப்படுத்துவது, தொழிலாளிகளின் ஒற்றுமையை வலுப்படுத்துவது போன்றவற்றில் அவரது பங்களிப்பு ஈடு இணையற்றது. கானத்தின் மறைவு இடதுசாரி அமைப்புக்கு மட்டுமல்ல, கேரளத்துக்கே இழப்பாகும்’ என இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
நன்றி
Publisher: www.vikatan.com
