சிக்கலில் கம்யூனிஸ்ட் தலைவரின் மகள்… ரூ.1.72 கோடிக்கு


கேரள மாநிலம் கொச்சியில் உள்ள மினரல்ஸ் அண்ட் ரூட்டெயில் லிமிடெட் கம்பெனி அலுவலகத்திலும், நிர்வாக இயக்குநர் சசிதரன் கர்த்தா என்பவரின் வீட்டிலும் இன்கம்டாக்ஸ் இன்வெஸ்டிகேஷ்ன் பிரிவு கடந்த 2019 ஜனவரி 25-ம் தேதி அதிரடி ரெய்டு நடத்தி இருந்தது.

அந்த ரெய்டில் யதார்த்தமாக சிக்கிய ஒரு டயரியில் ‘மாதப்படி’ என்ற கணக்கில் முக்கியமான அரசியல் பிரமுகர்கள், போலீஸ் அதிகாரிகளுக்குப் பணம் பட்டுவாடா செய்ததாக சில விபரங்கள் இருந்துள்ளன.

அந்த லிஸ்டில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனின் ‘எக்ஸாலாஜிக்’ கம்பெனியின் பெயரில் மாதம் தோறும் பணம் கொடுத்ததற்கான விவரங்கள் இருந்துள்ளன. 2017-ம் ஆண்டு தொடங்கி மூன்று ஆண்டுகள் ரூ.1.72 கோடிவீணா விஜயனுக்கு கொடுக்கப்பட்டதாக விவரக்குறிப்பு இருந்துள்ளது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ மேத்யூ குழல்நாடன்

கேரள கடற்கரையில் கருமணல் தோண்டி எடுப்பதற்காக சி.எம்.ஆர்.எல் நிறுவனம் பத்து ஆண்டுகளுக்கு மேலாக முயன்று வருகிறது. அந்த நிறுவனத்தின் சாப்ட்வேர் அப்டேட் செய்வதற் காக பல தவணையாக பணம் வழங்கப்பட்டிருக்கிறது.

ஆனால், வீணா விஜயனின் கம்பெனி அதுபோன்ற சாப்ட்வேர் அப்டேட் எதுவும் செய்யவில்லை எனவும், செய்யாத பணிக்காக பணம் வாங்கியது முதல்வர் மகள் என்ற வகையில் பெற்ற லஞ்சம் என பா.ஜ.க, காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதிலும், காங்கிரஸ் எம்.எல்.ஏ மேத்யூ குழல்நாடன் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து முதல்வர் பினராயி விஜயனையும், அவரது மகள் வீணா விஜயன் மற்றும் வீணா விஜயனின் கணவரும், கேரள மாநில பொதுப்பணித்துறை அமைச்சருமான முஹம்மது ரியாஸ் மீதும் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

வீணா விஜயன்

அதே சமயம், வீணா விஜயனின் நிறுவனம் அளித்த சேவைக்காக சி.எம்.ஆர்.எல் கம்பெனி பணம் கொடுத்ததாக சி.பி.எம் தரப்பில் கூறப்பட்டது. அப்படியானால், அந்த கம்பெனி வழங்கிய ரூ.1.72 கோடிக்கான ஜி.எஸ்.டி 31 லட்சம் ரூபாயை வீணா விஜயன் செலுத்தியதற்கான ஆவணங்களை வெளியிடவேண்டும் என எம்.எல்.ஏ மேத்யூ குழல்நாடன் கேட்டிருந்தார். அந்த விவரங்கள் நேற்று வெளியிடுவதாக கூறப்பட்டது. ஆனால், இன்று வரை வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ மேத்யூ குழல்நாடன், “கேரளத்தில் இன்று நடப்பது திட்டமிட்ட கொள்ளையும், கம்பெனி மூலம் ஊழலும் நடக்கிறது. இது என் போராட்டத்தின் தொடக்கம். எல்லாத் தவறுகளுக்கும் ஒரு ஆதாரம் நிச்சயம் இருக்கும். அதுதான் சி.எம்.ஆர்.எல் நிறுவனம் மூலம் வெளியே வந்துள்ளது.

நான் கேட்ட கேள்விகளுக்கு சி.பி.எம் எந்த பதிலும் சொல்வதில்லை. சி.எம்.ஆர்.எல் நிறுவனத்திடம் இருந்து இவ்வளவு தொகைதான் வீணா பெற்றுள்ளார் என சி.பி.எம் கட்சியால் கூற முடியுமா? இதுபோன்று ஒரு கம்பெனி மட்டும் அல்ல, பல கம்பெனிகளிடம் இருந்து வாங்கி உள்ளனர். வீணாவின் வங்கிக் கணக்குகளை சி.பி.எம் கட்சியால் வெளியேவிட முடியுமா?

வீணாவுக்கு ஒரு ஜி.எஸ்.டி அக்கவுண்ட் உண்டு. அது தவிர, தனியாக வேறொரு ஜி.எஸ்.டி கணக்கு இருக்கவும் வாய்ப்பு உள்ளது. செய்யாத பணிக்கு பணம் வாங்கி அதற்கு ஜி.எஸ்.டி செலுத்தி வெள்ளையாக்கும் செயல்களும் நடக்கின்றன. லட்டர்பேர்ட் கம்பெனி ஏற்படுத்தி கருப்பு பணத்தை வெள்ளை ஆக்குகிறார்கள். சி.பி.எம் மாநிலத் தலைமை வீணா விஜயனையும், அவரது கம்பெனிக்கும் செக்யூரிட்டியாக நிற்கிறது” என்றார்.

ஜி.எஸ்.டி

பேட்டியின்போது, வீணா விஜயனின் கம்பெனி பெங்களூரில் பதிவு செய்யப்பட்டது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிதான் நடக்கிறது. எனவே, வீணா விஜயன் ஜி.எஸ்.டி செலுத்தினாரா இல்லையா என்பது பற்றி எளிதில் விசாரித்து தெரிந்துகொள்ளலாமே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “பொறுத்திருந்து பாருங்கள்” என மேத்யூ குழல்நாடன் பதிலளித்தார்.

பினராயியின் மகள் இந்த சர்ச்சையில் சிக்கி இருப்பது பெரும் பரபரப்பை கேரளாவில் ஏற்படுத்தி இருக்கிறது!

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *