மக்களுடன் முதல்வர் திட்டம் மற்றும் கோவை, காந்திபுரம் சிறைச்சாலை வளாகத்தில் செம்மொழிப் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி உள்ளிட்டவற்றுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவைக்கு வந்திருந்தார். இன்று காலை முதல் கோவையில் பரவலாக மழை பெய்து கொண்டிருந்தது. மக்கள் மழையில் நனைந்துகொண்டே நிகழ்ச்சிக்கு வந்தனர்.



இதனால் நிகழ்ச்சி நடக்கும் மைதானத்தில் மழை நீர் தேங்கியது. மக்கள் அமரும் இடம் முழுவதும் சகதியும் மழைநீரும் சூழ்ந்திருக்கின்றன. மழை நீரை ஊழியர்கள் கைகளால் வெளியேற்றி, ஆங்காங்கே மண் போட்டு நிரப்பி சரி செய்தனர்.
செம்மொழிப் பூங்கா அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் அமைச்சர் முத்துசாமி, தி.மு.க எம்.பி-களுடன், பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கலந்துகொண்டார். அடிக்கல் நாட்டிய பிறகு மேடையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் மழை பெய்தது. அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளைச் செய்தது. மறுநாளே முக்கிய சாலைகளில் வெள்ளம் சீர் செய்யப்பட்டது. புறநகரில் ஒருசில பகுதிகளைத் தவிர நான்கைந்து நாள்களில் இயல்பு வாழ்க்கை திரும்பியது.

கடந்த இரண்டு நாள்களாகத் தென்மாவட்டங்களில் கடுமையாக மழை பெய்து வருகிறது. அரசு இயந்திரம் தென்மாவட்டங்களில் தீவிரமாக இயங்கி வருகிறது. அதிகாரிகளிடம் நான் தொடர்ந்து பேசி வருகிறேன். சென்னை மழை அனுபவத்தைக் கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு, தென்மாவட்ட மக்களைக் காப்போம்.
மக்கள் அரசு அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டியது குறைந்து, அவர்களுக்கான அடிப்படை சேவைகள் இணையம் வழியாக வழங்கப்பட்டு வருகின்றன. மக்கள் அடிக்கடி அணுகும் துறைகளான 13 துறைகளை உள்ளடக்கி `மக்களுடன் முதல்வர்’ திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. மக்களுடன் முதல்வர் திட்டத்தின் சிறப்பு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடக்கும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் தவிர மற்ற மாவட்டங்களில் மாநகராட்சி, நகராட்சி, கிராம ஊராட்சிகளில் 745 முகாம்கள் நடத்தப்படும்.

புயல் பாதித்த மாவட்டங்களில் நிவாரண உதவித் தொகை வழங்குவது முடிந்ததும், சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். அரசுமீது ஏழைகள் கொண்டிருக்கும் நம்பிக்கை அதிகரிக்க வேண்டும். வட்ட, மாவட்ட அளவிலான பிரச்னைகளைத் தீர்த்து மக்கள் கோட்டையை நோக்கி வருவதை மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகள் குறைக்க வேண்டும்.
கோவை செம்மொழிப் பூங்காவில் நீலகிரி உயிர்கோள மண்டலத்திலுள்ள அரிய வகை தாவரங்கள் பாதுகாக்கப்படும். இது முதற்கட்டமாக 45 ஏக்கரிலும், இரண்டாம் கட்டமாக 120 ஏக்கர் நிலப்பரப்பிலும் அமையவிருக்கிறது. இந்தப் பூங்காவில் உலகத்தரத்துடன்கூடிய பல சிறப்புகள் அடங்கி இருக்கும். இங்கு செம்மொழி வனம், மகரந்த வனம், மூலிகை வனம் உள்ளிட்ட 23 வனங்கள் அமைக்கப்படும். சென்னையில் கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை, மதுரையில் நூலகம், சிவகங்கையில் கீழடி அருங்காட்சியகம்,

திருநெல்வேலியில் பொருநை அருங்காட்சியகம், கோவையில் செம்மொழிப் பூங்கா என ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பார்த்துப் பார்த்து, திட்டங்களைச் செய்து வருகிறோம். அண்ணா, கலைஞர் வழியில் முதலமைச்சர் பதவி வழங்கிய மக்களுக்கு உழைப்பதே குறிக்கோளாகக் கொண்டு உழைத்து வருகிறேன். அரசு வேறு, மக்கள் வேறு அல்ல. நாடும், மக்களும் சேர்ந்து வளர வேண்டும். தமிழ்நாட்டை உலகமே வியந்து பார்க்கும் மாநிலமாக்க, எனக்கு நானே உழைத்து வருகிறேன். இந்தக் காட்சியை விரைவில் காண்போம்” என்றார்.
நன்றி
Publisher: www.vikatan.com
