பட மூலாதாரம், AAMIR QURESHI/AFP VIA GETTY IMAGES
ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் நடைபெறும் 2023 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் விளையாட்டின் இறுதிப் போட்டியை நோக்கிய இந்திய அணியின் பயணத்தில் கேப்டன் ரோஹித் சர்மா முக்கிய பங்கு வகித்துள்ளார்.
ஆனால் இந்த புதிய பொறுப்புக்கு முன், ரோஹித் ஷர்மாவின் கிரிக்கெட் எதிர்காலமே கேள்விக்குறியாக இருந்த நேரத்தைப் பற்றி பேசலாம், ஏனெனில் அவரது வாழ்க்கை நிதி நெருக்கடிகளால் அதிக அளவு தடைகளை எதிர்கொண்டிருக்கலாம். அதனால், அவரது விளையாட்டு வாழ்க்கைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கலாம்.
1999ஆம் ஆண்டு முகமது அசாருதீன் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் உலகக் கோப்பைக்காக விளையாடிக்கொண்டிருந்தது.
அங்கு மும்பையின் புறநகர் பகுதியான போரிவலியில், 12 வயதே நிரம்பிய ரோஹித் சர்மாவை அவரது தந்தை மற்றும் குடும்பத்தினர் பணம் சேகரித்து கிரிக்கெட் விளையாட அனுப்பி வைத்தனர்.
போக்குவரத்துக் கழக கிடங்கில் பணிபுரிந்த அவரது தந்தைக்கு வருமானம் குறைவாக இருந்ததால், அந்த நாட்களில் ரோஹித் தனது தாத்தா மற்றும் மாமா ரவி ஷர்மாவின் வீட்டில் வசித்து வந்தார். அதுவும் மிகவும் ஒரு வறுமையான சூழ்நிலையில் அவரது வாழ்க்கை நகர்ந்துகொண்டிருந்தது.
ஆனால் ஒரு போட்டியும் ஒரு பள்ளியும் அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் திசையை மாற்றின.
பட மூலாதாரம், YOGESH PATEL
பள்ளி கட்டணமே செலுத்த முடியாத சிறுவனாக ரோஹித்
அதே ஆண்டில், ரோஹித் சர்மா சுவாமி விவேகானந்தா இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆஃப் போரிவலிக்கு எதிராக ஒரு போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அந்தப் பள்ளியின் பயிற்சியாளர் தினேஷ் லாட், அவரது விளையாட்டைப் பார்த்து அவருக்கு உதவித்தொகை வழங்க, பள்ளி உரிமையாளர் யோகேஷ் பட்டேலுக்கு பரிந்துரைத்தார்.
தற்போது 54 வயதாகும் யோகேஷ் படேல் கூறுகையில், “இந்த பையனுக்கு கிரிக்கெட்டில் சிறந்த திறமை உள்ளது. ஆனால் எங்கள் பள்ளியின் மாதக் கட்டணமான 275 ரூபாயை அவனது குடும்பத்தால் செலுத்த முடியாது, எனவே அவருக்கு உதவித்தொகை கொடுங்கள்’ என்று எங்கள் பயிற்சியாளர் கூறினார்,” என்றார்.
அவர் கூறுகையில், “நாங்கள் அந்த முடிவை எடுத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இன்று ரோஹித் இந்திய கேப்டனாக உள்ளார். எங்கள் பயிற்சியாளரின் கருத்து சரியானது,” என்றார்.
இந்த முடிவிற்கு பல வருடங்கள் கழித்து, ரோஹித் சர்மாவே ESPNcricinfo.com க்கு அளித்த பேட்டியில், “நான் விவேகானந்தா பள்ளியில் சேர்ந்து கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று பயிற்சியாளர் விரும்பினார். ஆனால் என்னிடம் பணம் இல்லை. பின்னர் அவர் எனக்கு ஸ்காலர்ஷிப் பெற்றுத் தந்தார். எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததால் நான்கு வருடங்கள் இலவசமாகப் படித்ததுடன் எனது விளையாட்டுத் திறமையையும் வளர்த்துக்கொண்டேன்,” என்றார்.
இந்தப் புதிய பள்ளியில் சேர்ந்த சில மாதங்களுக்குள், ரோஹித் ஷர்மா 140 ரன்களில் ஆட்டமிழக்காமல் விளையாடினார். இது மும்பையின் பள்ளிகள், மைதானங்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் அதிகம் விவாதிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் வாழ்க்கையில் ஏறுமுகம்தான். இன்று கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சமாக உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியை வழிநடத்தும் பொறுப்பில் அவர் இருக்கிறார்.
சச்சின் டெண்டுல்கர், வினோத் காம்ப்ளி முதல் பிரவீன் ஆம்ரே வரை மும்பை சிவாஜி பூங்காவில் கிரிக்கெட் பயிற்சி பெற்று வளர்ந்தவர்கள்.
இந்த மைதானத்தில் இன்னும் டஜன் கணக்கான பயிற்சி வலைகள் இருக்கின்றன. அதில் ஒன்று அதே காலகட்டத்தில் இங்கு வீரராக விளையாடிய அசோக் ஷிவால்கருக்கு சொந்தமானது.
அசோக் ஷிவால்கர் கூறுகையில், “ரோஹித் ஷர்மா முன்பு தனது பள்ளிக்காக ஆஃப் ஸ்பின் வீசியது எனக்கு நினைவிருக்கிறது. பின்னர் அவரது பேட்டிங் திறமையை அவரது பயிற்சியாளர் அடையாளம் கண்டுகொண்டார்,” என்றார்.
“இதற்குப் பிறகு மும்பையின் புகழ்பெற்ற கங்கா லீக் கிரிக்கெட் மற்றும் மும்பை கிரிக்கெட் சங்கப் போட்டிகளில் ரோஹித் தனது பெயரை நிலைநாட்டத் தொடங்கினார்.”
இன்று, விவேகானந்தா பள்ளியின் உரிமையாளரான யோகேஷ் படேல், அவரது முடிவால் மகிழ்ச்சியடைந்து, “கோவிட்-19-ன் போது எனது நலம் விசாரிக்க ரோஹித் என்னை அழைத்தார். மக்களுக்கு தொடர்ந்து உதவுங்கள் என்று நான் அவரிடம் கூறினேன். அவரைப் பார்க்க எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.” என்றார்.
பட மூலாதாரம், YOGESH PATEL
2023 உலகக்கோப்பையில் ரோஹித் ஆட்டம் எப்படி?
நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டிக்கு முன், ரோஹித் தனது துல்லியமான கேப்டன்சி மட்டுமின்றி தனது வலுவான பேட்டிங்கிலும் போட்டியில் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினார்.
2019 உலகக் கோப்பையில் அதிக ரன்களை குவித்த ரோஹித், இந்தப் போட்டியில் புதிய உத்தியுடன் விளையாடி தனது ஸ்கோரைப் பற்றி கவலைப்படாமல் முதல் பவர்பிளேயில் பந்துவீச்சாளர்களைத் தாக்கினார்.
இது ஷுப்மான் கில் ஸ்கோர் செய்யும் வாய்ப்பை வழங்கியது மட்டுமல்லாமல், மிடில் ஆர்டரில் உள்ள கோஹ்லி, ஸ்ரேயாஸ் மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோருக்கும் தங்கள் இன்னிங்ஸை விளையாட முழு வாய்ப்பை அளித்தது.
பட மூலாதாரம், YOGESH PATEL
இந்த உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் பூஜ்ஜியத்தில் அவுட் ஆனார். அதன் பிறகு, ரோஹித் சர்மா விஸ்வரூபம் எடுத்தார்.
131, 86, 48, 46, 87, 4, 40, 61 மற்றும் 47 ரன்களுடன் 124.15 ஸ்டிரைக் ரேட்டுடன் அவரது இன்னிங்ஸ் உண்மையிலேயே பாராட்டுக்குரியனவாக இருக்கின்றன. இது இந்தியாவுக்கு நல்ல தொடக்கத்தை வழங்கியது மட்டுமல்லாமல் பெரிய இலக்குகளை நோக்கிப் பயணிப்பதை எளிதாக்கியது.
இந்த போட்டியில் கேப்டனாக இந்த பட்டத்தை வெல்வதை தவிர ரோஹித்துக்கு வேறு ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே உள்ளது.
முதல் போட்டியில் ரன்னே எடுக்காத அதே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் கடைசி ஆட்டம் தான் அது.
இப்போது இறுதிப் போட்டியில் பெரிய ஸ்கோர் செய்து முதல் போட்டியை மறந்து விடுவதை விட சிறந்த வழி என்னவாக இருக்க முடியும்?
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
