
பட மூலாதாரம், Mark antony
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர்கள் விஷால், எஸ்.ஜே.சூர்யா கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘ மார்க் ஆண்டனி’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. ரிது வர்மா கதாநாயகியாக நடித்துள்ள இத்திரைப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். அந்த திரைப்படம் வணிகரீதியாக ஓரளவுக்கு வெற்றி பெற்றது.
ஆனால் அதன் பிறகு வெளியான ‘அன்பானவன், அசராதவன், அடங்காதவன்’ உள்ளிட்ட திரைப்படங்களில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு சறுக்கல் தான்.
இந்த நிலையில் தான் அவர் இயக்கி உள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியாகி உள்ளது. விஷாலுக்கும் சமீபகாலமாக சொல்லிக் கொள்ளும்படி வெற்றி படங்கள் அமையாத நிலையில் வெளியாகி இருக்கும் மார்க் ஆண்டனியில் இவர்கள் கூட்டணி மாஸ் காட்டி உள்ளதா?
‘மாநாடு’ திரைப்படத்தில் தனது நடிப்புக்கு பெரும் பாராட்டுகளை பெற்ற எஸ்.ஜே.சூர்யா, மார்க் ஆண்டனியில் ஜாக்கி, மதன் என இரு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
மார்க் ஆண்டனியின் கதை என்ன?

பட மூலாதாரம், mark antony trailer /youtube
இருபது ஆண்டுகளுக்குப் பிறகு 1995 இல் அந்த டைம் டிராவல் ஃபோன், மார்க் (மகன் விஷால்) இடம் கிடைக்கிறது.
தனது பல வருட முயற்சிக்கு பின் 1975 இல் லேண்ட்லைன் ஃபோன் மூலம் டைம் டிராவல் செய்யும் கருவியை கண்டுபிடிக்கிறார் சிரஞ்சீவி (செல்வராகவன்). இந்த டைம் டிராவல் கருவியை பயன்படுத்தி தன்னுடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்களை மாற்றுகிறார். அப்படி அவர் செய்யும் ஒரு முயற்சியில் அவருடைய உயிர் பறிபோகிறது.
இருபது ஆண்டுகளுக்குப் பிறகு 1995 இல் அந்த டைம் டிராவல் ஃபோன், மார்க் (மகன் விஷால்) இடம் கிடைக்கிறது. அதை வைத்து தனது தந்தை ஆண்டனியால் (மற்றொரு விஷால் கதாபாத்திரம்) தன்னுடைய வாழ்வில் நடந்த கசப்பான விஷயங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்று மார்க் முடிவு செய்கிறார்.
அதன்பின் என்ன நடந்தது? இதில் மார்க்கின் தந்தையான ஆண்டனியின் நண்பரும், கேங்ஸ்டருமான ஜாக்கியின் பங்கு என்ன என்பது தான் மார்க் ஆண்டனியின் மீதி கதை.
இரண்டாம் பாதியில் வேகம்
த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு பெயரை உருவாக்கிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், அதன் பிறகு வெற்றிப் படங்களை தர தவறிவிட்டார் என இந்தியா டுடே தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.
ஆனால், அந்த குறையையெல்லாம் போக்கும் விதத்தில் ஒரு டைம் டிராவலர் கேங்ஸ்டர் கதையை, நகைச்சுவை கலந்து கொடுத்திருப்பதன் மூலம் மார்க் ஆண்டனி திரைப்படம் அவருக்கு வெற்றியை திரும்பப் பெற்றுத்தரும் என்றுதான் சொல்ல வேண்டும் என்று இந்தியா டுடே தெரிவித்துள்ளது.
படத்தின் முதல் பாதியை விட, இரண்டாவது பாதியில் திரைக்கதையில் இயக்குநர் வேகம் காட்டியிருப்பதாகவும் அந்த விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இம்மாதிரியான படத்தில் லாஜிக்கை எதிர்பார்க்கக் கூடாது என்பதை திரைப்படம் அவ்வப்போது நினைவுப் படுத்துவது இப்படத்தின் குறை.
டைம் ட்ராவல் ஃபோனில் குறிப்பிட்ட அளவிலான அம்சங்களே அமைந்துள்ளது என சிரஞ்சீவி டைரியில் எழுதி வைத்திருந்தாலும் விதிகளை அவ்வப்போது திரைக்கதைக்கு ஏற்ப மாற்றிக் கொள்கின்றனர் என்கிறது இந்தியா டுடே.
விஷாலை விஞ்சும் எஸ்.ஜே. சூர்யா
அப்பா, மகன் என்று விஷால் தனது கதாபாத்திரங்களை நிறைவாக செய்திருக்கிறார். ஆனாலும் மகன் கதாபாத்திரத்தை விட தந்தை (ஆண்டனி) கதாபாத்திரம் கவனம் பெறுவதாக இந்தியா டுடே கூறியுள்ளது.
படத்தின் ஹீரோவாக விஷால் இருந்தாலும், வில்லனாக வரும் எஸ்.ஜே.சூர்யா ‘நடிப்பு அரக்கன்’ டைட்டில் கார்டில் சொல்லப்பட்டது போல நடிப்பில் கலக்கி இருப்பதாகவும் இந்தியா டுடே விமர்சனத்தில் பாராட்டி உள்ளது.
சில நேரங்களில் நீங்கள் படத்தில் வரும் வசனத்திற்காக சிரிக்கலாம் அல்லது அந்த படத்தை நினைத்தும் சிரிக்கலாம் எது எப்படியோ படம் பார்க்கும் போது நீங்கள் சிரித்து கொண்டிருப்பீர்கள் அதுதான் படத்தின் வெற்றி என்றும் இந்தியா டுடே விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Mark Antony
இயக்குநரின் வித்தியாசமான பாணி
டைம் மிஷின் பாணியிலான கதை தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல என்றாலும், மார்க் ஆண்டனி படத்தில் நிகழ்காலத்தில் இருந்து கடந்த காலத்திற்கு கதாபாத்திரங்களை செல்லவிடாமல், அவர்களை பேச மட்டுமே வைத்து வித்தியாசமான பாணியைக் கையாண்டிருக்கிறார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் என்று தினமணி தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளது.
இரண்டு விஷால், இரண்டு எஸ்.ஜே.சூர்யா, இரண்டு காலகட்டங்கள் என சிக்கலான கதையில் இயன்றவரை ரசிகர்களை பெரிதும் குழப்பாமல் இயக்குநர் திரைக்கதையை அமைத்திருக்கிறார் எனவும் தினமணி விமர்சித்துள்ளது.
நடிப்பு அரக்கன்
டைட்டில் கார்டில் ‘நடிப்பு அரக்கன்’ என்ற பட்டத்துடன் ஆரம்பமாகும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு, படம் முழுக்க ரசிகர்களை உற்சாகப்படுகிறது. தந்தையும், மகனுமாக தொலைபேசியில் பேசும் காட்சிகளில் உடல் மொழியிலும் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார் என்று தினமணி விமர்சனம் பாராட்டி உள்ளது.
தெலுங்கில் பிரபலமான நடிகரான சுனில், இந்த படத்தில் நடித்துள்ள முக்கிய கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய வாய்ப்புள்ளது என்றும் தினமணி தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.
பின்னணி இசை பலம்
ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை மார்க் ஆண்டனி திரைப்படத்துக்கு மற்றொரு பலம் என்று குறிப்பிட்ட தினமணி, பாடல்களில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
நல்ல காட்சி வருமா என முதல் பாகத்தில் நெளிய வைக்கிறார்கள். தன் முந்தையப் படங்களை போல இதிலும் சில காட்சிகளில் பெண்களின் மீதான தன் வெறுப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். குறிப்பாக ஒய். ஜி. மகேந்திரனின் கதாபாத்திரம் நெருடலை தருகிறது. இதை தவிர்த்து பார்த்தால் மார்க் ஆண்டனியை ரசிக்கலாம் என்கிறது தினமணியின் விமர்சனம்.
புத்துணர்ச்சியூட்டும் பொழுதுபோக்கு
அறிவியல் புனைகதையை நகைச்சுவை கலந்து இயக்குநர் கொடுத்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளது.
க்ளைமாக்ஸ் குழப்பமாக இருந்தாலும் இறுதியில் ஆண்டனியின் ரீ -என்ட்ரி கவனிக்க வேண்டிய ஒன்று என்று குறிப்பிட்டுள்ளது டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனம்.
மார்க்கின் ஜோடியாக வரும் ரிது வர்மா, திரையில் குறைவான நேரமே தோற்றினாலும் தனது பாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார் என்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில் மார்க் ஆண்டனி ஒரு சிறந்த திரைப்படம் என்று சொல்ல முடியாது. ஆனால் ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியூட்டும் பொழுபோக்கு சினிமா என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனம் செய்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்