குளிர்காலச் சுற்றுலா: வட இந்தியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள் என்ன?

குளிர்காலச் சுற்றுலா: வட இந்தியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள் என்ன?

குளிர்கால சுற்றுலா

பட மூலாதாரம், Getty Images

முழங்கால் வரை பனியில் புதைத்து நடந்தபடியே பனி போர்த்திய மலைகளைப் பார்த்து ரசிப்பது யாருக்குதான் பிடிக்காது?

கோடைக்காலச் சுற்றுலாவைப் போலவே குளிர்காலச் சுற்றுலாவும், சுற்றுலாவை விரும்புபவர்கள் மத்தியில் பிரபலமானது.

இந்தியாவைப் பொருத்தவரை டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்கள் குளிர்காலச் சுற்றுலாவுக்கு ஏற்றவை. வட இந்தியாவின் பல பகுதிகளிலும் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கிவிட்டது. காஷ்மீர், இமாச்சல பிரதேசம் போன்ற பகுதிகளில் புது வெள்ளை மழை பொழிய தொடங்கியுள்ளது.

பணி அழுத்தங்களுக்கு ஒரு இடைவெளி விட்டு, பனிக்கு மத்தியில் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் சுற்றித்திரிவது பலரின் விருப்பமாக இருக்கும். குளிர்காலத்தில் வட இந்தியாவில் பார்க்கவேண்டிய முக்கிய இடங்கள் என்னென்ன?

குளிர்காலச் சுற்றுலாவுக்கு திட்டமிடுவது எப்படி?

குளிர்கால சுற்றுலா

பட மூலாதாரம், Getty Images

குளிர்கால சுற்றுலா

பட மூலாதாரம், Getty Images

ஸ்ரீநகர்

பனி என்றாலே நிச்சயம் நம் நினைவுக்கு வருவது காஷ்மீர்தான்.

‘அன்பே வா ’வில் தொடங்கி ‘லியோ’வரை திரையில் காஷ்மீரை பார்க்கும்போதே நமக்குள் குளிரத் தொடங்கிவிடும். பனிப்பொழிவை விரும்புபவர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று காஷ்மீரின் ஸ்ரீநகர்.

கிழக்கின் வெனிஸ் என்று அழைக்கப்படும் ஸ்ரீநகரில் சாஷ்மே ஷாஹி தோட்டம், நிகின் ஏரி, தால் ஏரி, துலித் தோட்டம் என சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன.

குல்மார்க்

பனிப்பொழிவை அனுபவிக்க விரும்புபவர்கள் செல்ல வேண்டிய மற்றொரு இடம் ஸ்ரீநகரில் இருந்து 60கி.மீ. தொலைவில் உள்ள குல்மார்க். உறைந்த ஏரிகள், பனி முடிய நிலப்பரப்பு, இமயமலையின் பிரமிக்கவைக்கும் காட்சிகள் என சுற்றுலா பயணிகள் விரும்பக்கூடிய இடமாக குல்மார்க் உள்ளது.

இங்குள்ள குல்மார்க் கொண்டோலாவில் இயக்கப்படும் கேபிள் கார் உலகின் உயரமான கேபிள் கார் சேவைகளில் ஒன்று. இங்கு பனிச்சறுக்கில் ஈடுபடுவதே ஒரு அலாதியான அனுபவமாக இருக்கும். கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை பனிப்பொழிவுகளுக்கு மத்தியில் கொண்டாடுவதற்காக பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குளிர்காலத்தில் இங்கு வருவதுண்டு.

குளிர்கால சுற்றுலா

பட மூலாதாரம், Getty Images

மணாலி

உயரமான பனி படர்ந்த மலைகள், பள்ளத்தாக்குகள் என சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற சொர்க்கபுரியாக திகழும் மற்றொரு இடம் இமாச்சல பிரதேசத்தில் உள்ள மணாலி.

குளிர்காலத்தில் மணாலி, அதன் அருகேயுள்ள ஷோலாங் பள்ளத்தாக்கு, ரோதாங் கணவாய் போன்ற பகுதிகளில் நல்ல பனிப்பொழிவு இருக்கும். எனினும், குளிர்காலத்தில் ரோஹ்தாங் கணவாய் மூடப்படும் என்பதையும் கவனத்தில்லொள்ள வேண்டும்.

சாகசப் பிரியராக இருந்தால் பனிச்சறுக்கு, மலையேற்றம், படகு ஓட்டம், பாராகிளைடிங், ஏர் பலூன் ரைட் என ஏராளமான சாகசங்களை நீங்கள் மணாலியை அனுபவிக்க முடியும்.

சிம்லா

மலைகளின் அரசியான சிம்லா இல்லாமல் குளிர்கால சுற்றுலாவை நாம் திட்டமிட முடியாது. பிரிட்டிஷ் ஆட்சியின்போது கோடைக்கால தலைநகராக இருந்த சிம்லா, வட இந்தியாவில் முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது. குளிர்காலத்தில் மலைகள், சாலைகள், கடைகள் என அனைத்தும் பனியால் சூழப்பட்டு வென்னிற ஆடை உடுத்தியது போல் காணப்படும்.

தீர்த்தன் பள்ளத்தாக்கு

இரைச்சலான நகரவாழ்க்கையில் இருந்து அமைதியான சூழலை விரும்புபவர்களுக்கு ஏற்ற இடம் இமாச்சலில் உள்ள தீர்த்தன் பள்ளத்தாக்கு. குல்லு மாவட்டத்தில் உள்ள தீர்த்தன் பள்ளத்தாக்கு, அதன் அற்புதமான இயற்கை அழகு, அமைதியான சூழல், அடர்ந்த காடுகள், வளமான பல்லுயிர் போன்றவற்றுக்கு பெயர் பெற்றது.

யுனெஎஸ்கோவின் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக உள்ள இமாலய தேசியப் பூங்கா தீர்த்தன் பள்ளத்தாக்கு அருகே அமைந்திருக்கிறது.

குளிர்காலத்தில் ஜலோரி கணவாய் (Jalori pass) மூடப்படும் என்பதால் புந்தர் விமானநிலையம் அடைந்து அங்கிருந்து கார் மூலமாக தீர்த்தன் பள்ளத்தாக்குக்கு செல்லலாம். சாலை வழியாகச் செல்லவேண்டுமென்றால் சுந்தர் நகர் பாதை வழியாக தீர்த்தன் பள்ளத்தாக்கை அடைய முடியும்.

குளிர்கால சுற்றுலா

பட மூலாதாரம், Getty Images

ஆலி

உத்தராகண்டில் உள்ள சிறிய நகரமான ஆலி (Auli) அதன் பனிச்சறுக்கு விளையாட்டுகளுக்கு பெயர் பெற்றது.

குளிர்காலத்தில் இங்கு பல்வேறு சாகச நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. இங்குள்ள ஊசியிலைக் காடுகள், பனிப்பிரதேசங்கள் சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கும். பனிச்சறுக்கு விளையாட்டை நேசிப்பவராக இருந்தால் ஜனவரி முதல் மார்ச் மாதத்தில் ஆலி செல்லும் வகையில் திட்டமிடலாம்.

இதேபோல் உத்தர்காண்டில் உள்ள ஆலி, மசூரி, நைனித்தால் ஆகிய சுற்றுலா தலங்களில் ஜனவரி மாதத்தில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் அப்போது செல்வது சரியானதாக இருக்கும். பனிப்பொழிவைத் தாண்டி உத்தராகண்டின் மசூரி, ராஜஸ்தானின் ஜெய்லர்மெர் போன்ற பகுதிகளும் குளிர்கால சுற்றுலாவுக்கு ஏற்ற இடங்களாக திகழ்கின்றன.

கஜ்ஜியார்

குட்டி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் கஜ்ஜியார், புகழ்பெற்ற சுற்றுலா தலமான டல்ஹௌஸியில் இருந்து 24 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

இங்குள்ள கஜ்ஜி நாகா கோவில் பிரசித்திபெற்றது. பைன் மரங்களுக்கு மத்தியில் ரம்மியமான சூழலை இங்கு அனுபவிக்க முடியும். டல்ஹௌஸிக்கு சென்று பழமையான தேவாலயங்கள், இயற்கை காட்சிகளையும் ரசித்துவிட்டு வரலாம்.

குளிர்கால சுற்றுலா

பட மூலாதாரம், Getty Images

குறைந்த செலவில் சுற்றுலா செல்வது எப்படி?

தனியாக செல்வதை விட அதிகமான நபர்கள் இணைந்து சுற்றுலா செல்வதன் மூலம் செலவை குறைக்கலாம் என்று கூறுகிறார் பனிக்கர் டிராவல்ஸின் இயக்குநர் பார்வதி பனிக்கர். இந்நிறுவனம் 56 ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுலா சேவையை வழங்கி வருகிறது.

“வட மாநிலங்களுக்கான சுற்றுலா டெல்லியில் இருந்தே பெரும்பாலும் தொடங்குகின்றன. நீங்கள் குழுவாக பயணம் (Group Tours) செய்யும்போது ஆட்களுக்கு ஏற்ப பயண செலவு குறையும். தனியாக பயணிக்க விரும்புபவர்கள் கொஞ்சம் கூடுதலாக செலவு செய்ய வேண்டியிருக்கும்,” என்றார்.

“தங்கும் அறைகளை டபுள் ஷேரிங், ட்ரிபிள் ஷேரிங் என்று தெரிந்தெடுத்துக்கொள்வது மூலம் செலவுகளை மேலும் குறைக்க முடியும். ஒருசில இடங்களுக்கு அரசு போக்குவரத்தை பயன்படுத்துவதன் மூலமும் செலவை கணிசமாக குறைக்க முடியும்,” என்று அவர் கூறுகிறார்.

கவனிக்க வேண்டியவை என்ன?

முதன்முறையாக குளிர்கால சுற்றுலாவை மேற்கொள்பவர்கள் பின்வரும் விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும் என்றும் பார்வதி பனிக்கர் கூறுகிறார். அதன்படி:

  • மருந்துகள்: ஒருசிலருக்கு குளிர் ஏற்றுக்கொள்ளாமல் போகக்கூடும். எனவே, தேவையான மருந்துகளை கையிருப்பில் வைத்துக்கொள்வது அவசியம்.
  • மலைப்பகுதியில் மேலே செல்லச்செல்ல ஆக்சிஜன் குறைய வாய்ப்பு இருக்கிறது. எனவே, ஆஸ்துமா போன்ற பாதிப்பு இருப்பவர்கள் அதற்கு ஏற்ப பயணத்தை திட்டமிட வேண்டும்.
  • குளிரை தாங்கக்கூடிய உடைகள், பூட்ஸ் போன்றவற்றை உடன் வைத்துக்கொள்ள வேண்டும். சுற்றுலா செல்லும் இடத்தில் வாங்கிக்கொள்ளலாம் என்று அலட்சியமாக இருக்கக் கூடாது.
  • சுற்றுலா சேவை நிறுவனங்கள் மூலம் இல்லாமல் நீங்களாகவே செல்கிறீர்கள் என்றால், சுற்றுலா செல்லும் இடத்தைப் பற்றி கூடுதலாக தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம்.
குளிர்கால சுற்றுலா

பட மூலாதாரம், Getty Images

சேவை நிறுவனங்கள் மூலமாக சுற்றுலா செல்வது, நாமாகவே அனைத்து ஏற்பாடுகளையும் செய்துகொண்டு சுற்றுலா செல்வது ஆகிய இரண்டில் எது சிறந்தது என்று பார்வதி பனிக்கரிடம் கேட்டபோது, அது அவரவர் விருப்பம் சார்ந்தது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “தனியாகச் சுற்றுலா சென்ற அனுபவம் இருப்பவர்கள் அவர்களாகவே அனைத்து ஏற்பாடுகளையும் செய்து சுற்றுலா செல்வதில் சிக்கல் இருக்கப் போவதில்லை. அரசுப் பேருந்துகள் மூலமாக குறைந்த செலவில் செல்ல முடியும். தனியாக சுற்றுலா செல்வது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். ஆனால், முதல்முறையாக சுற்றுலா செல்பவர்கள் சேவை நிறுவனங்கள் மூலம் செல்வது பாதுகாப்பானதாகவும் சிக்கனமானதாகவும் இருக்கும்,” என்றார்.

மேலும், “உங்களுக்கு உள்ளூர் மொழி தெரியாமல் இருந்தால் சுற்றுலா செல்லும் இடங்களில் சில சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். டிராவல்ஸ் மூலம் செல்லும்போது வழிகாட்டுநர் உடன் இருப்பார் என்பதால் உபயோகமாக இருக்கும். போக்குவரத்து, உணவு போன்றவற்றுக்கு அதிக பணம் கொடுத்து ஏமாறும் சூழலை தவிர்க்க முடியும். எதைபற்றியும் சிந்திக்காமல் சுற்றுலாவை அனுபவிக்க முடியும்,” என்றார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *