குமுளி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தினமும் 22 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. மகரவிளக்கு பூஜையில் இதனை 30 ஆயிரமாக அதிகரிக்க தேவசம் போர்டு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 30-ம் தேதி மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. மறுநாள் முதல் அன்னதான மண்டபத்தில் அன்னதானம் திட்டம் தொடங்கப்பட்டது. மூன்று இடைவெளிகளுடன் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. காலை 7 மணி முதல் 11 மணி வரை காலை உணவாக உப்புமா, கடலைக்குழம்பு மற்றும் சுக்கு காப்பி. வழங்கப்படுகிறது.
மதிய உணவாக மதியம் 12 முதல் 3 மணி வரை. வெஜிடபிள் புலாவ், சாலட் அல்லது காய்கறி சாதம் மற்றும் ஊறுகாய், சுக்கு காப்பி அளிக்கப்படுகிறது. இரவு 7 மணி முதல் 12 மணி வரை கஞ்சி, கொண்டைக்கடலை, ஊறுகாய் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்படுகின்றன.
மகரவிளக்கு பூஜை வழிபாட்டுக்காக நடை திறக்கப்பட்டது முதல் நேற்று வரை சுமார் 8 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேவசம் போர்டு உதவி செயல் அலுவலர் வினோத்குமார் கூறுகையில், “உணவுகள் எரிவாயு மூலம் தயாரிக்கப்படுகிறது. தானியங்கி மூலம் பாத்திரங்கள் கழுவப்படுகின்றன. ஒரே நேரத்தில் இரண்டாயிரம் பேர் சாப்பிட வசதி இருந்தாலும் நெரிசலைத் தவிர்க்கவும், உணவுகளை எளிதாக பரிமாறவும் ஆயிரத்து 600 பேர் அனுமதிக்கப்படுகின்றனர்.
அந்த வகையில் ஒருநாளைக்கு சராசரியாக 22 ஆயிரம் பேருக்கு அன்னதானம் அளிக்கப்படுகிறது. மகரவிளக்கு பூஜை காலங்களில் தினமும் 30 ஆயிரம் பேருக்கு உணவு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
