‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தை விரைவில் காண இருக்கும் கிளிண்ட் ஈஸ்ட்வுட் – கார்த்திக் சுப்பராஜ் உற்சாகம்

சென்னை: பிரபல ஹாலிவுட் நடிகர் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் விரைவில் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ பார்க்க இருக்கிறார் என அவரது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவலை அறிந்த இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் “படத்தை பற்றிய அவரது கருத்துகளை அறிய ஆவலாக இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த தீபாவளி பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியான படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தின் நாயகன் ராகவா லாரன்ஸ் பிரபல ஹாலிவுட் நடிகர் கிளிண்ட் ஈஸ்ட்வுட்டின் ரசிகராக நடித்திருப்பார். மேலும் படம் நெடுங்களிலும் ஈஸ்ட்வுட்டின் ரெஃபரன்ஸ் இருந்துகொண்டேயிருக்கும்.

இந்நிலையில் எக்ஸ் தளத்தில் ரசிகர் ஒருவர், “இந்தியாவிலிருந்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்கிற தமிழ் படத்தை எடுத்திருக்கிறோம். நெட்பிளிக்ஸில் இருக்கிறது. படம் முழுக்க உங்கள் பங்களிப்பைக் காட்சிப்படுத்தியிருக்கிறோம். அனிமேஷன் காட்சிகளில் உங்களின் இளம் வயதைக் காட்டியிருக்கிறோம். வாய்ப்பு கிடைக்கும்போது கண்டிப்பாக இப்படத்தைப் பாருங்கள்” எனக் கூறி க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தை டேக் செய்திருந்தார்.

இதற்கு அந்தக்கணக்கிலிருந்து பதில் வந்துள்ளது.அதில், “ஹாய். கிளிண்ட் ஈஸ்ட்வுட் அப்படத்தைப் பற்றி அறிந்து வைத்திருக்கிறார். இப்போது, நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் பணிகள் முடிந்ததும் அந்தப் படத்தை (ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்) பார்ப்பார். நன்றி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை அறிந்த இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் பதிவில், “நம்ப முடியவில்லை. படத்தைப் பார்த்துவிட்டு ஈஸ்ட்வுட் கூறும் கருத்துகளுக்காகக் ஆவலாக காத்திருக்கிறேன். ஆசிர்வதிக்கப்படவான உணர்கிறேன். இதை சாத்தியப்படுத்திய ரசிகர்களுக்கு நன்றி” என உற்சாகமாகத் தெரிவித்துள்ளார்.