மகளிர் உரிமைத் தொகை: செப்.5-க்குள் விண்ணப்பதாரர்களை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு விண்ணப்பப் பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டுள்ளது. முதற்கட்ட முகாம்கள் ஜூலை 24-ம் தேதி முதல் ஆகஸ்ட் 04-ம் தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 05-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெற்றது. இதுவரை 1.54 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி செயலி வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்கள் மற்றும் இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதற்கான விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் இன்னும் 2 நாட்களில் முடிவடைந்து விடும் என சொல்லப்படுகிறது. இந்த விவரங்கள் அனைத்தும் தமிழக அரசிடம் உள்ள தரவுகளுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அனைத்தையும் வருகிற செப்டம்பர் 5-ம் தேதிக்குள் செய்து முடித்து தகுதியானவர்களின் பட்டியலை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நன்றி
Publisher: 1newsnation.com