கடந்த ஐம்பது ஆண்டுகளில் 11 சட்டமன்றத் தேர்தல்களை ராஜஸ்தான் மாநிலம் எதிர்கொண்டிருக்கிறது. 1985, 1993 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் மட்டும் ஆளுங்கட்சி தொடர்ச்சியாக அடுத்த தேர்தலிலும் வெற்றிபெற்றது. அதுவும், காங்கிரஸ் கட்சியே அந்தச் சாதனையைப் புரிந்தது.

மற்றபடி, ராஜஸ்தானில் காங்கிரஸும் பா.ஜ.க-வும் மாறி மாறி ஆட்சிக்கு வருவதுதான் கடந்த முப்பதாண்டுக்கால வரலாறாக இருந்துவருகிறது. அந்த வழக்கத்தை மாற்ற வேண்டும் என்று தீவிரமாக வேலைசெய்துவருகிறார் காங்கிரஸின் இன்றைய முதல்வர் அசோக் கெலாட். காங்கிரஸின் வெற்றியை உறுதிசெய்வதற்காக, மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவும் பழைய முகங்களை மாற்றுவது உட்பட பல முயற்சிகளில் அவர் தீவிரம் காட்டிவருகிறார்.
பா.ஜ.க-வில் உட்கட்சிப்பூசல் காரணமாக, முதல்வர் வேட்பாளர் என யாரையும் முன்னிறுத்தவில்லை. ராஜஸ்தானில் பிரபலத் தலைவரான முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவை கட்சித் தலைமை ஓரங்கட்டிவிட்டதால், அவரும் அவருடைய ஆதரவாளர்களும் தேர்தல் பணியில் ஆர்வம் காட்டவில்லை என்ற செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்த நிலையில், பிரதமர் மோடியின் செல்வாக்கை வைத்து வெற்றிபெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் பா.ஜ.க-வினர் இருக்கிறார்கள்.

ஐந்து முறை எம்.பி., மூன்று முறை முதல்வர் என்று மிகுந்த செல்வாக்குடன் வலம்வரும் முதல்வர் அசோக் கெலாட், சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள் சிலருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்காமல் பட்டியலிலிருந்து கழற்றிவிட்டிருக்கிறார். பல புதிய முகங்களுக்கு காங்கிரஸ் தலைமை வாய்ப்பு வழங்கியிருக்கிறது. வேட்பாளர் பட்டியல்களில் புதிய பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன. அசோக் கெலாட்டுக்கு எதிராக கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் யுத்தம் நடத்திவந்த முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட், அவர் பேட்டியிடும் டோன்க் தொகுதிக்குள் முடக்கப்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில், முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக பா.ஜ.க-வினர் ஊழல் குற்றச்சாட்டுகளைக் கிளப்பிவருகிறார்கள். சமீபத்தில் மட்டும், மூன்று முறை ராஜஸ்தானில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பதில் எதுவும் சொல்லாமல், காங்கிரஸ் அரசின் நலத்திட்டங்களைப் பிரசாரம் செய்துவருகிறார் கெலாட். மேலும், ஓ.பி.சி பிரிவினரின் வாக்குகளைக் கவரும் வகையில், சாதிவாரி கணக்கெடுப்பை ராஜஸ்தானில் நடத்துவோம் என்ற அறிவிப்பை கடைசி நேரத்தில் கெலட் வெளியிட்டிருக்கிறார்.

காங்கிரஸைப் போலவே, பா.ஜ.க-விலும் புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. நரேந்திரசிங் தோமர், பிரஹலாத் படேல், ஃபக்கன்சிங் ஆகிய மூன்று மத்திய அமைச்சர்களை சட்டமன்ற வேட்பாளர்களாக பா.ஜ.க நிறுத்தியிருக்கிறது. தற்போது எம்.பி-க்களாக இருக்கும் ஏழு பேரை சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர்களாக பா.ஜ.க நிறுத்தியிருக்கிறது.
கடந்த ஜனவரியிலிருந்து 11 முறையும், கடந்த நான்கு மாதங்களில் மட்டும் ஒன்பது முறையும் ராஜஸ்தானுக்கு வந்துசென்றிருக்கிறார் பிரதமர் மோடி. ஊழல் மட்டுமல்லாமல் சட்டம் ஒழுங்கும் மாநிலத்தில் மோசமடைந்திருக்கிறது என்ற குற்றச்சாட்டை கெலாட் அரசுக்கு எதிராக பிரதமர் மோடி தொடர்ந்து பேசிவருகிறார். அதே நேரத்தில், மத்திய அரசின் திட்டங்களை பிரதமர் மோடி பிரசார மேடைகளில் முன்வைத்துவருகிறார்.

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.500 மானியம், ஏழைக் குடும்பங்களுக்கு இலவச ரேஷன் பொருள்கள், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.25 லட்சம் மருத்துவக் காப்பீடு, அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டம் என பல முக்கிய வாக்குறுதிகளை காங்கிரஸ் வழங்கியிருக்கிறது. ஆனாலும், சத்தீஸ்கரிலும், மத்தியப் பிரதேசத்திலும் காங்கிரஸ் கட்சி கண்டிப்பாக ஜெயிக்கும் என்று அடித்துச்சொல்லியிருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ராஜஸ்தான் குறித்து அந்தளவுக்கு உறுதியாகச் சொல்லவில்லை. வெற்றிபெற வாய்ப்பு இருக்கிறது என்றே ராகுல் சொல்லியிருக்கிறார்.
நன்றி
Publisher: www.vikatan.com
