பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதி ஒரு மாதத்துக்கு மேலாகிவிட்டது. ஆனால், பிரதமரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இந்த நிலையில், தமிழ்நாடு அரசே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்திவருகின்றன. ‘பீகாரைப் பின்பற்றி தமிழ்நாட்டில் மாநில அரசே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தலாம்.. அதற்கு எந்தத் தடையும் இல்லை.. உச்ச நீதிமன்றமே அதை அனுமதிக்கிறது’ என்றும் சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தும் அமைப்புகள் கூறுகின்றன.
இந்த நிலையில், மாநில அரசே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு எந்த பதிலும் சொல்லாத முதல்வர் ஸ்டாலின், சென்னையில் இன்று (நவ. 27) நடைபெற்ற முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை திறப்பு விழாவில் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசினார். அப்போது, “மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு நடத்த வேண்டும். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு முழுமையாக, முறையாக வழங்கப்பட வேண்டும். பட்டியலின, பழங்குடியின, சிறுபான்மையினர் இட ஒதுக்கீடும் முறையாக வழங்கப்பட வேண்டும். இட ஒதுக்கீட்டை முறையாக கண்காணிக்க அனைத்துக் கட்சி எம்.பி-க்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும்” என்று ஸ்டாலின் கூறினார்.
ஆக, மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தப்போவதில்லை. என்ன காரணம் என்று தி.மு.க தரப்பில் கேட்டபோது, “மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்த வேண்டிய மத்திய அரசின் வேலை. அந்த வேலையை மாநில அரசு செய்தால், அதற்கு சட்ட அங்கீகாரமும் எதுவும் இல்லை” என்கிறார்கள்.
நன்றி
Publisher: www.vikatan.com
