வழக்கும் பின்னணியும்..!
தஞ்சையைச் சேர்ந்த சசிகலா ராணி, மதுரையை சேர்ந்த கலைச்செல்வி இருவரும் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணியாற்றினர். தங்களது பள்ளிகளில் இருந்து மாணவர்களுக்கு வழங்க வேண்டிய அரசு லேப்டாப்கள் திருடு போன வழக்கு நிலுவையில் உள்ளதால், இருவரையும் ஓய்வு பெற அனுமதிக்கவில்லை. அவர்களுக்குரிய எந்தவித பணப்பலன்களும் கிடைக்கவில்லை.
இதனால் தங்களை ஓய்வு பெற அனுமதித்து, ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்களை வழங்குமாறு உத்தரவிடக் கோரி தனித்தனியே உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் கடந்த 14-ம் தேதி நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற உத்தரவுப்படி தஞ்சாவூர் எஸ்.பி ஆஷிஸ் ராவத் மற்றும் மதுரை எஸ்.பி சிவபிரசாத் ஆகியோர் நேரில் ஆஜராகினர்.
தொடர்ந்து அரசுத்தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி பேசுகையில், “தமிழ்நாடு முழுவதும் இதுவரை 140 பள்ளிகளில் மடிக்கணினிகள் திருடுபோனதாக புகார் கொடுக்கப்பட்டு, காவல்துறையால் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 59 தலைமை ஆசிரியர்கள் மீதான புகாரில் அவர்களே பணம் செலுத்தி உள்ளனர்” என வாதிடப்பட்டது.
இதனை பதிவு செய்த நீதிபதி பட்டு தேவானந்த், “ஏழை மாணவர்களுக்கு பயனுள்ள திட்டமாக உள்ள இலவச மடிக்கணினி திட்டத்தை இனிவரும் காலங்களிலாவது இலவச மடிக்கணினிகள் திருடுபோனால் கண்டறியும் வகையில் தொழில்நுட்ப வசதியோடு கொடுக்க அரசு முயற்சி செய்ய வேண்டும். பள்ளிகளில் இலவச லேப்டாப்கள் திருடு போன வழக்குகளில் தீவிர நடவடிக்கையை காவல்துறையும், பள்ளிக்கல்வித்துறையும் மேற்கொள்ள வேண்டும். இந்த வழக்கில் பள்ளிகல்வி அதிகாரிகளும், காவல்துறையும் செயல்படாமல் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளனர்.

பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து கொண்டு தலைமை ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கூடுதல் பணிச்சுமை கொடுப்பதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாது. மடிக்கணினிகள் திருடு போன வழக்குகளில் தலைமையாசிரியர்களை குற்றவாளிகள் போல் சித்தரித்தால் கல்வித்துறை மீதான மக்களின் பார்வை தவறாக மாறிவிடும். திருடுபோன லேப்டாப்களை அறிவியல் பூர்வமாக கண்டறிவது குறித்து விவரங்களை காவல்துறைக்கு வழங்க வேண்டும்” எனக்கூறி வழக்கை விசாரணைக்காக வரும் ஜனவரி 4ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இது தொடர்பாக கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு உடன் பேசினோம். “ஆசிரியர் சமூகம் நீண்ட நெடிய காலமாக கோரிக்கை ஒன்றை முன்வைத்து வருகிறது. கற்றல், கற்பித்தல் பணிகளைத் தவிர எந்த விதமான அலுவல் பணிகளிலும் ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது என்பதுதான் அது. இது. ஆசிரியர்களுக்கான கோரிக்கை அல்ல. மாணவர்களின் நலன் சார்ந்த ஒரு கோரிக்கை.
ஒரு மாணவர் பள்ளிக்கு வருகிறார் என்றால், அவர் ஆசிரியருடன் உரையாடவே வருகிறார், மாணவரை வழிநடத்துவது மட்டுமே ஆசிரியரின் முதன்மையான வேலை. அதில் மட்டுமே ஆசிரியர்கள் தன் கவனத்தை செலுத்த வேண்டும். மற்ற அலுவல் பணிகளைப் பார்ப்பதற்கு அந்தந்த துறைக்கு ஏற்றார் போல் அலுவல் ஊழியர்களை அரசு தர வேண்டும். உதாரணத்திற்கு நான் ஒரு வேதியியல் ஆசிரியர் என்றால் என் மாணவர்களை ஆய்வகத்துக்கு அழைத்துச் செல்லும்போது, நானே அங்கு ஆய்வக உதவியாளராகவும் செயல்பட வேண்டி இருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில் எப்படி மாணவர்களுக்கு குறிப்பிட்ட ஒரு பாடத்தை ஒரு ஆசிரியரால் முழுமையாக விளக்க முடியும்.

இ.எம்.ஐ.எஸ் தளத்தில் பதிவிடுவது தொடங்கி, மடிக்கணினி, சீருடை, உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள், மதிய, காலை உணவுத்திட்டம் என எல்லாவற்றுக்குமே ஆசிரியர்கள் மட்டுமே பொறுப்பாக்கப்படுகின்றனர் எனில் அந்த ஆசிரியரின் செயல் திறன் பாதிக்கப்படுமா? இல்லையா?.. ஆசிரியர்களுக்கு இதனால் ஏற்படும் மன அழுத்தத்திற்கு யார் பொறுப்பு? இப்படிப்பட்ட மனநிலையில் உள்ள ஒரு ஆசிரியரால் தான் நடத்தும் பாடத்தை முழுமையாக தயாரித்து வந்து குழந்தைகளுக்கு நடத்த முடியுமா?.
எங்களின் இந்த நீண்ட கால கோரிக்கைக்கு இந்த தீர்ப்பு வலு சேர்த்து இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். பள்ளிகளில் தேர்தல் நடத்தப்படும் போது, வாக்கு பெட்டிகள் பள்ளிகளில் தானே பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன, வாக்கு பெட்டிகள் காணாமல் போகாமல் இருக்கும் போது மடிக்கணினிகள் மட்டும் எப்படி காணாமல் போகிறது? எனில், அதற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் இதற்கு கொடுக்கப்படவில்லை என்றே அர்த்தம்.
தமிழ்நாடு முழுவதும் 140 பள்ளிகளில் இப்படி நடந்திருக்கிறது என்றால் இதன் மூலமாக அரசுக்கு எவ்வளவு விரயம்? மாணவர்களுக்கு எவ்வளவு பாதிப்பு என்பதை இனியாவது இந்த அரசு புரிந்து கொள்ள வேண்டும். இந்தத் தீர்ப்பு பள்ளிக்கல்வி அதிகாரிகளுக்கு சில புரிதல்களை ஏற்படுத்த உதவ வேண்டும். பள்ளிக்கல்வி அதிகாரிகள் கற்க மறுக்கின்றனர். ஒரு செயல் நடந்தால் அதை எப்படி தவிர்த்து இருக்க வேண்டும்? அடுத்து அது நிகழாமல் எப்படி தவிர்க்க வேண்டும்? என அதிகாரிகள் யோசிப்பது இல்லை. மடிக்கணினிகள் காணாமல் போனதற்கு பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளே பொறுப்பே தவிர, ஆசிரியர்கள் நிச்சயம் பொறுப்பல்ல. அதையும் இந்த தீர்ப்பு வெளிப்படுத்தி இருக்கிறது.” என்றார்.

`ஆசிரியர்களுக்கு அப்படி என்ன தான் கூடுதல் வேலை?’
“என்ன வேலை இல்லை என்று கேளுங்கள். மாணவர்களுக்கு ஆதார் அட்டை, சாதிச் சான்றிதழ், சிறுபான்மை மற்றும் ஆதி திராவிடர் உதவித் தொகை, வாக்காளர் சரிபார்ப்பு பணிகளான BLO,DLO, இது தவிர அரசு வழங்கும் 14 வகையான சலுகைகள், திறன் தேர்வு இணையதளத்தில் பதிவு செய்தல், EMIS கல்வி மேலாண்மை தகவல் முகமை உள்ளிட்ட தொடர் பணிகளுக்கிடையே ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் என அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
தேர்தல் வேலை தொடங்கி துப்புரவு பணியாளர் பணி வரை பல்வேறு விவகாரங்களை ஒருங்கிணைப்பது ஆசிரியர்களுக்கு பெரும் பணிச்சுமையை ஏற்படுத்துகின்றது. அலுவலர்கள், ஊழியர்கள், கணினி உதவியாளர்கள் இல்லாததால் அவர்கள் செய்ய வேண்டிய பணிகளையும் ஆசிரியர்களை மேற்கொள்ளச் செய்வதால் கற்பித்தல் பணி பாதிக்கிறது. மேற்கண்ட பணிகள் எதையும் தனியார் மெட்ரிக் பள்ளிகளின் ஆசிரியர்கள் செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது எல்லாவற்றையும் தாண்டி பல பள்ளிகளில் உள்ள சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களை மாணவர்களுக்கு நீட் பயிற்றுவிக்க அனுப்புகின்றனர். அப்படி சிறந்த ஆசிரியர்கள் போய்விட்டால் அந்த சிறந்த ஆசிரியரின் கண்காணிப்பில் இருக்கக்கூடிய மாணவர்களின் நிலை என்ன ஆகும். ஒரு 9ம் வகுப்பு மாணவன் வேதியியல் பாடத்தை படிக்கிறான் என்றால் அவன் நீட் தேர்வுக்கு தயாராக படிக்கவில்லை. அந்தப் பாடத்தை புரிந்து கொள்வதற்காக தான் படிக்கிறான் எனவே அடிப்படை கல்வியை சரிவர கொடுக்க வேண்டியது ஆசிரியர்களின் கடமை அந்தக் கடமையைத்தான் அரசு செய்யவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது.” என்றார் காட்டமாக.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
