பா.ஜ.க மாநிலத் தலைவராக அண்ணாமலை வந்த பிறகு, அ.தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையே உறவு சுமுகமாக இல்லை. அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் ஒரே கூட்டணியில் இருந்தாலும், இரண்டு கட்சிகளின் நிர்வாகிகளும் அவ்வப்போது காரசாரமாக வார்த்தைப்போரில் ஈடுபட்டே வந்தனர்.

ஜெயக்குமார் உள்ளிட்ட அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள், பா.ஜ.க-வுக்கு எதிராக என்ன விமர்சனம் வைத்தாலும், பாய்ந்துசென்று பதிலடி கொடுப்பவராகவே அண்ணாமலை இருந்துவந்தார். ஆனால், பா.ஜ.க-வுடன் கூட்டணியை `முறித்து’க் கொள்வதென்று அ.தி.மு.க அறிவித்த பிறகு, அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் அது பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் சொல்லவில்லை. அ.தி.மு.க-வுக்கு எதிராக கருத்து எதுவும் தெரிவிக்க வேண்டாம் என்று பா.ஜ.க நிர்வாகிகளை அந்தக் கட்சியின் மேலிடம் அறிவுறுத்தியிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பா.ஜ.க-வுடன் 1998-ம் ஆண்டு அ.தி.மு.க கூட்டணி வைத்தது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின்போது ஏற்பட்ட அந்தக் கூட்டணி, ஓராண்டு காலம் நீடித்தது. அதன் பிறகு, 2004-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், மீண்டும் பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க கூட்டணி வைத்தது. அந்தத் தேர்தலில் தோல்வி ஏற்பட்டதைத் தொடர்ந்து, இனிமேல் பா.ஜ.க-வுடன் கூட்டணியே கிடையாது என்று ஜெயலலிதா அறிவித்தார். அதன் பிறகு, அவர் உயிருடன் இருந்த காலம்வரை பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க கூட்டணி வைக்கவே இல்லை. 2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலின்போது, பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சனம் செய்தார் ஜெயலலிதா. அந்தத் தேர்தலில் அ.தி.மு.க பெரும் வெற்றியைப் பெற்றது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் கூட்டணி சேர்ந்தன. அதில், 39 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டுமே அ.தி.மு.க வெற்றிபெற்றது. தமிழ்நாட்டில் பா.ஜ.க ஒரு தொகுதியில்கூட வெற்றிபெறவில்லை. ஆனாலும், இந்தக் கூட்டணி 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் தொடர்ந்தது. இதிலும் இந்தக் கூட்டணிக்கு வெற்றி கிடைக்கவில்லை. அதன் பிறகு பா.ஜ.க-வின் மாநிலத் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார்.
அதன் பிறகு அ.தி.மு.க., பா.ஜ.க இடையே சுமுகமான உறவு இல்லை. இரு தரப்பினருக்கும் அடிக்கடி வார்த்தைப்போர் நடைபெற்றது. ஜெயலலிதா குறித்து அண்ணாமலை விமர்சித்ததற்கு அ.தி.மு.க கடும் எதிர்வினையாற்றியது. அண்ணாமலையுடன்தான் உறவு சரியில்லையே தவிர, பா.ஜ.க-வின் டெல்லி மேலிடத்திடம் அ.தி.மு.க தலைமை நெருக்கமாகவே இருந்துவந்தது. அதில், சமீபத்தில் விரிசல் ஏற்பட்டது. நாடாளுமன்றத் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையே அதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

அண்ணா குறித்தும் அண்ணாமலை பேசிய சர்ச்சைப் பேச்சை ஒரு காரணமாக முன்வைத்து, கூட்டணியிலிருந்து விலகுவதாக அ.தி.மு.க அறிவித்துவிட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் மட்டுமல்லாமல், 2026-ல் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க-வுடன் கூட்டணி கிடையாது என்று அறிவித்திருக்கிறார்கள்.
கூட்டணி முறிவு குறித்து தமிழ்நாடு பா.ஜ.க தலைவர்கள் வெளிப்படையாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த விவகாரம் குறித்து அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘கட்சி மேலிடம்தான் பதில் சொல்லும்’ என்று கழன்றுகொண்டார்.
ஆனால், இந்தப் பிரிவு தற்காலிகமானதுதான் என்கிற ரீதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் தமிழ்நாட்டு கட்சிகளின் தலைவர்கள் கூறிவருகிறார்கள். இது உண்மையாகக்கூட இருக்கலாம் என்று கூறும் அரசியல் பார்வையாளர்கள், பா.ஜ.க நிர்வாகிகள் மௌனம் காப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்.

இந்த நிலையில், அடுத்த எட்டு மாதங்களில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறியிருக்கிறார் தமிழ்நாடு பா.ஜ.க-வின் மேலிடப் பார்வையாளராக இருந்த சி.டி.ரவி. இந்தக் காலகட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை சமாதானப்படுத்தி, கூட்டணி தொடருவதற்கான முயற்சியில் பா.ஜ.க தலைமை ஈடுபடும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com
