விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், டிசம்பர் 23-ல் திருச்சியில் நடைபெறவிருந்த `வெல்லும் சனநாயகம்’ மாநாடு டிசம்பர் 29-ம் தேதிக்கு தள்ளிவைத்திருப்பதாக அறிவித்திருக்கிறார் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். தேதி மாற்றத்துக்கான காரணங்கள் குறித்து விசாரித்தோம்.
கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் விழா நிகழ்வில் மாநாடு குறித்த அறிவிப்பு வெளியானது. மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட `இந்தியா’ கூட்டணிக கட்சித் தலைவர்கள் பங்கேற்பதாகவும் சொல்லப்பட்டது.

மாநாடுக்கான இட தேர்வு, விளம்பர பணிகள், மாவட்ட வாரியாக ஆலோசனை கூட்டங்கள் வேக வேகமாக நடந்தன. இந்நிலையில்தான் மாநாட்டுக்கான தேதி மாற்றப்படுகிறது என்ற அறிவிப்பை அண்மையில் வெளியிட்டிருந்தது கட்சி. நம்மிடம் பேசிய விசிக மாவட்டச் செயலாளர் சிலர் “சென்னை இப்போதுதான் மிக்ஜாம் புயல் பாதிப்பிலிருந்து மீண்டும் வருகிறது. டிசம்பர் 19-21 வரை மீண்டும் மழைபெய்யுமென சொல்லப்படுகிறது. ஆகவே மழைக் காரணமாக மாநாடு ஒத்திவைத்திருப்பதாக தலைமையிலிருந்து தகவல் வந்திருக்கிறது” என்றனர்.
ஆனால், நடந்ததே வேறு என பேச ஆரம்பித்த விவரமறிந்தவர்கள் சிலர், “தி.மு.க-வின் 2-வது இளைஞரணி மாநாடு சேலத்தில் டிசம்பர் 17-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. புயலால பாதிக்கப்பட்ட சென்னையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் தி.மு.க மாநாட்டை டிசம்பர் 24-ம் தேதிக்கு மாற்றிவைத்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சேலம் மாநாட்டில் பங்கேற்க இருப்பதால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டில் முதலமைச்சர் பங்கேற்க இயலாத நிலை ஏற்பட்டது. இதனால் தமிழ்நாடு முதலமைச்சர் மாநாட்டில் அவசியம் பங்கேற்க வேண்டுமென மாநாட்டு தேதியையே விசிக மாற்றியுள்ளது. இந்நிலையில் தேதி மாற்றப்பட்ட நிலையில் நிகழ்வில் பங்கேற்பதாக இருந்த இதர `இந்தியா கூட்டணி’ கட்சித் தலைவர்களிடம் பேசி வருகிறர் திருமாவளவன்” என்றனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய விசிக துணைப் பொதுச்செயலாளர் எழில் கரோலின், “மாநாட்டில் பங்கேற்கும் இதர கட்சித் தலைவர்களின் வருகையையும் அவர்களின் நேரத்தை கருத்தில்கொண்டு மாநாட்டுக்கான தேதியை மாற்றிவைத்துள்ளோம். வெல்லும் சனநாயகம் என்றாலே வீழும் சானாதனம் என்றுதான் பொருள். ஆகவே அதீத முக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டில் அனைவரும் பங்கேற்பது மிக அவசியம்.
அதேபோல் `இந்தியா` கூட்டணியின் வெற்றியை உறுதி செய்திடும் மாநாடாக இது அமையும். சுமார் 10 லட்சம் பேரை திரட்டுவதற்காக திட்டமிட்டு வருகிறது. மாநாடு தேதியை டிசம்பர் 23 என அறிவித்ததால்தான். அதனை மையப்படுத்தி சுவர் ஓவியம் தொடங்கி, போஸ்டர், வருகைக்கான திட்டமிடல் என அனைத்தும் செய்யப்பட்டது. இப்போது தேதி மாற்றப்பட்டதால் அதுதொடர்பான வேலைகளிலும் கவனம் செலுத்தி வருகிறோம்” என்றார்

வெல்லும் சனநாயகம் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு விசிக தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும் இன்னும் காங்கிரஸ் கட்சி எந்த பதிலும் சொல்லவில்லை என்பது குறிப்பிடதக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
