அந்த நிலையில், ஏற்கெனவே உணவு, தண்ணீர், மின்சாரம், எரிபொருள் என காஸாவுக்கு செல்லக்கூடிய அத்தியாவசியப் பொருள்களின் இணைப்பை இஸ்ரேல் துண்டித்துவிட்டதால், காஸா மக்கள் பசிப் பட்டினியில் அவதிபட்டுக்கொண்டிருக்கின்றனர். மேலும், மருத்துவ வசதிகளின்றி காயம்பட்டவர்களும், குழந்தைகள், கர்ப்பிணிகளும் சிரமப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், `மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள், பெண்கள், முதியோர்களெல்லாம் 24 மணி நேரத்துக்குள் வெளியேறுவது சாத்தியமே இல்லை; இஸ்ரேல் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும்’ என ஐ.நா வேதனை தெரிவித்தது. தவிர, இஸ்ரேலின் திட்டத்தை அறிந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், “ஹமாஸை அழிப்பது நியாயம்தான். ஆனால் அதைக் காரணம்காட்டி காஸாவை மீண்டும் இஸ்ரேல் ஆக்கிரமிக்கக் கூடாது!’ எனக் கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில், இஸ்ரேல் ராணுவத்தின் `வெளியேறுங்கள்’ அறிவிப்பையடுத்து, வடக்கு காஸாவில் மொத்தமுள்ள 11 லட்சம் மக்களில் சுமார் 4 லட்சம் மக்கள் தங்களின் சொந்த நிலத்தை விட்டு வெளியேறி, காஸாவின் அல்-தின் சாலை வழியாக தெற்கு பகுதி நோக்கி இடம்பெயர்ந்தனர். இதை ஹமாஸ் போராளிக் குழுவும் உறுதி செய்திருக்கிறது.

தொடர்ந்து ஹமாஸ் அமைப்பு, `வடக்கு காஸாவை விட்டு மக்கள் வெளியேற வேண்டாம், நமது நிலம் ஆக்கிரமிக்கப்படும்’ என தனது மக்களை கேட்டுக்கொண்டுவருகிறது. அதேநேரம், இஸ்ரேல் ராணுவமோ, `ஹமாஸ் அமைப்பு வெளியேறும் மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி, வெளியேற விடாமல் தடுக்கிறது’ என குற்றம்சாட்டிவருகிறது. அந்த நிலையில், பாதிக்கும் மேற்பட்ட மக்கள் வடக்கு காஸாவை விட்டு வெளியேறி தெற்கு பகுதிக்கு வந்துவிட்டனர். சில மக்கள், `எங்கள் சொந்த மண்ணை விட்டு வெளியேற மாட்டோம். செத்தாலும் எங்கள் பாலஸ்தீன மண்ணிலேயே சாவோம்!’ எனக் கூறி தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறாமல் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், இஸ்ரேல் அறிவுறுத்தலின்படி காஸா அல்-தின் சாலையில் தெற்கு நோக்கிப் பயணித்த மக்கள் மீதும் இஸ்ரேல் ராணுவம் சொன்னதுக்கு மாறாக தாக்குதல் நடத்திய சம்பவங்களும் நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
நன்றி
Publisher: www.vikatan.com
