அயோத்தியில் நேற்று நடைபெற்ற ராமர் கோயில் பிரதிஷ்டை நிகழ்ச்சியை, இந்தியா கூட்டணியின் பெரும்பாலான கட்சிகள், `இது பா.ஜ.க-வின் மத அரசியல்’ என்று கூறி ஒன்றாகப் புறக்கணித்தன. ஆனால், இந்தியா கூட்டணி ஆரம்பித்த நாள் முதலே, எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் ஒற்றுமை இல்லை என பா.ஜ.க சாடிவருகிறது. அதற்கேற்றாற்போல, இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகியவை மேற்கு வங்கத்தில் ஒன்றுக்கொன்று எதிராக இருக்கின்றன.

அதேபோல், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிற கட்சிகளான சமாஜ்வாதி உத்தரப்பிரதேசத்திலும், ஆம் ஆத்மி டெல்லி, பஞ்சாப்பிலும் காங்கிரஸிடம் எப்படி சீட் பகிர்வு செய்துகொள்ளப்போகிறது என்பது விவாதப்பொருளாகவே இருக்கிறது. அதற்கான வேலைகள் இந்தியா கூட்டணியில் தற்போது நடந்துகொண்டு இருக்கின்றன. இந்த நிலையில், இந்தியா கூட்டணியின் அஜெண்டாவை மார்க்சிஸ்ட் கம்ம்யூனிஸ்ட் கட்டுப்படுத்த நினைப்பதை ஏற்க முடியாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருப்பது கூட்டணி வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.
மாநிலத்தில் நேற்று மேற்கொண்ட மத நல்லிணக்கப் பேரணியில் உரையாற்றிய மம்தா, “எதிர்க்கட்சி கூட்டத்தின்போது இந்தியா என்ற பெயரை நான் தான் பரிந்துரை செய்தேன். ஆனால், ஒவ்வொருமுறையும் கூட்டத்தில் நான் கலந்துகொள்ளும் போதெல்லாம், இடதுசாரிகள் அந்த அஜெண்டாவை கட்டுப்படுத்த முயற்சிப்பதை பார்க்கிறேன். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. 34 ஆண்டுகளாக நான் யாருடன் போராடி வந்தேனோ, அவர்களுடன் என்னால் உடன்பட முடியாது. இருப்பினும், இத்தகைய அவமானங்களை சகித்துக்கொண்டு இந்தியா கூட்டணி கூட்டங்களில் கலந்துகொண்டேன்.

இன்று எத்தனை அரசியல்வாதிகள் பா.ஜ.க-வை நேருக்கு நேர் எதிர்க்கின்றனர்… ஒருவர் கோயிலுக்குச் சென்றால் போதும் என்று நினைக்கிறார். ஆனால், அது மட்டும் போதாது. கோயில், குருத்வாரா, தேவாலயம், மசூதி எனப் பல இடங்களுக்குச் சென்றவள் நான் மட்டுமே. நீண்ட காலமாக நான் போராடி வருகிறேன். பாபர் மசூதி பிரச்னை நடந்தபோதும், வன்முறை நடந்தபோதும், நான் தெருவில் இறங்கினேன். பா.ஜ.க-வை எதிர்த்துப் போராடுவதற்கு எனக்கு பலமும், அதற்கான அடித்தளமும் இருக்கிறது. ஆனால், தொகுதிப் பங்கீடு பற்றி நாங்கள் சொல்வதைக் கேட்க சிலர் விரும்பவில்லை. நீங்கள் பா.ஜ.க-வை எதிர்த்துப் போராட விரும்பவில்லை என்றாலும், குறைந்தபட்சம் அவர்களிடம் சீட் கொடுக்காதீர்கள்” என்று கூறினார்.

முன்னதாக, கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு நடந்த உட்கட்சி கூட்டத்தில், 42 லோக்சபா தொகுதிகளிலும் தங்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படாவிட்டால், திரிணாமுல் காங்கிரஸ் தனியாகப் போட்டியிடத் தயாராக இருப்பதாக மம்தா கூறியது காங்கிரஸிடையே அதிருப்பதி ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY
நன்றி
Publisher: www.vikatan.com
