`பிரதமர் மோடியின் கழுத்தை பிடிக்கப்போகிறோம்’ என்று சொல்லிக்கொண்டு பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மும்பையில் நடக்க இருக்கும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு வந்துள்ளார். ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் மற்றும் அடுத்து வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது குறித்து விவாதிப்பதற்காக 26 எதிர்க்கட்சி தலைவர்கள் மும்பையில் கூடி ஆலோசனை நடத்த இருக்கிறனர். மும்பையில் இக்கூட்டம் நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தை மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே முன்னின்று நடத்துகிறார். சிவசேனா உடைந்த பிறகு உத்தவ் தாக்கரே தன்னை தேசிய அளவில் காட்டிக்கொள்ளும் விதமாக இக்கூட்டத்தை தானே முன்னின்று நடத்துகிறார். அவருடன் அவரின் மகன் ஆதித்ய தாக்கரேயும் இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்.

இக்கூட்டத்திற்கு வரும் தலைவர்களுக்காக, மும்பை சாந்தாகுரூஸ் விமான நிலையம் அருகில் நட்சத்திர ஹோட்டலில் 170 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு இந்த ஹோட்டலில் தான் இந்தியா கூட்டணி தலைவர்களின் கூட்டமும் நடைபெறுகிறது. இக்கூட்டத்தின் முதல் நாளான நாளை (31-08-2023) உத்தவ் தாக்கரே இந்தியா கூட்டணியின் லோகோவை வெளியிடுகிறார் எனச் சொல்லப்படுகிறது. அதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கு உத்தவ் தாக்கரே இரவு விருந்து கொடுத்து கெளரவிக்கிறார். ஒன்றாம் தேதி எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் 26 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இது தவிர பகுஜன் சமாஜ், அகாலி தளம் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்து இரு தரப்பில் இருந்தும் உறுதி செய்யப்படவில்லை. வடகிழக்கு மாநிலத்தில் இருந்தும் சில கட்சிகள் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக சிவசேனா(உத்தவ்) எம்.பி.சஞ்சய் ராவத் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் தொகுதிகளை பங்கிட்டுக்கொள்வது குறித்தும், ஒருங்கிணைப்புக்கமிட்டி அமைப்பது குறித்தும் பிரதானமாக விவாதிக்கப்பட இருக்கிறது. இதற்கு முன்னதாக, ஜூன் மற்றும் ஜூலை நடந்த இரண்டு கூட்டங்களும் எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருந்த மாநிலத்தில் நடைபெற்றது. ஆனால் மகாராஷ்டிராவில் இப்போது பா.ஜ.க. ஆதரவு சிவசேனா(ஏக்நாத் ஷிண்டே) ஆட்சியில் இருக்கிறது.

எனவே இக்கூட்டத்தை சிறப்பாக நடத்தி தனது செல்வாக்கை நிரூபித்துக்காட்டவேண்டும் என்பதில் உத்தவ் தாக்கரே தீவிரமாக இருக்கிறார். இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவே ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தனது மகன் தேஜஸ்வி யாதவுடன் மும்பை வந்துவிட்டார். மும்பை வரும் முன்பு பாட்னா விமான நிலையத்தில் லாலுபிரசாத் அளித்த பேட்டியில், “மும்பையில் நரேந்திர மோடியின் கழுத்தை பிடிக்கப்போகிறோம்” என்று தெரிவித்தார். மும்பை விமான நிலையத்தில் அவர்களை காங்கிரஸ் மூத்த தலைவர் சஞ்சய் நிரூபம் உட்பட தலைவர்கள் வரவேற்றனர். விமான நிலையத்தில் பேட்டியளித்த தேஜஸ்வி, “எதிர்க்கட்சி கூட்டணியின் நெருக்கடி காரணமாகவே மத்திய அரசு சிலிண்டர் விலையில் 200 ரூபாயை குறைத்திருக்கிறது” என்று தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்திற்கு போட்டியாக மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மாநில எம்.பி.க்களை அழைத்து மக்களைவைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த இருக்கிறார். இரண்டு நாள்கள் நடக்கும் கூட்டத்தில் இரண்டு துணை முதல்வர்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர். எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொள்ள மும்பை வரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நடிகர் அமிதாப்பச்சனுக்கு ரக்ஷா பந்தனை முன்னிட்டு ராக்கி கயிறு கட்ட முடிவு செய்துள்ளார் எனவும் தகவல் பரவுகிறது. தேர்தல் காலம் நெருங்குவதால் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் அரசியல் கட்சிகள் கவனம் ஈர்க்கும் பணிகளில் தீவிரம் காட்டுகிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
