நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே ஓய்வில் இருக்கிறார். அவ்வப்போது சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கும், உள்ளூரில் இருக்கும் பிரபல தனியார் மருத்துவமனைகளுக்கும் செல்வது வழக்கம். இதனால் அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறார். இருப்பினும் சமீபத்தில் தனது பிறந்தநாளை, கோயம்பேட்டில் இருக்கும் கட்சி தலைமை அலுவலகத்தில் கொண்டாடினார். அப்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ரசிகர்கள் வந்திருந்தனர். இறுதியாக தீபாவளி பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாடியிருந்தார், விஜயகாந்த்.

அதுகுறித்த புகைப்படங்களும் வெளியாகியிருந்தது. இந்நிலையில் தொண்டையில் ஏற்பட்ட தொற்றின் காரணமாக கடந்த 18-ம் தேதி சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றின் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக தே.மு.தி.க தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், `தே.மு.தி.க நிறுவனத் தலைவர் விஜயகாந்த், வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காகச் சென்றிருக்கிறார். ஓரிரு நாள்களில் வீடு திரும்புவார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்!’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தே.மு.தி.க நிர்வாகிகள் சிலர், “விஜயகாந்துக்கு கடந்த 18-ம் தேதி மாலை திடீர் சளி, காய்ச்சல், இருமல் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து உடல்நலம் தேறியது. தற்போது சீராக இருக்கிறார். 19-ம் தேதி இரவு 10 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யலாம் என மருத்துவர்கள் முடிவு செய்திருந்தனர். இருப்பினும் கூடுதலாக ஒருநாள் இருந்து பார்த்துவிட்டு செல்லலாம் என பிறகு முடிவு எடுக்கப்பட்டது. எனவே இன்று டிஸ்சார்ஸ் செய்யப்படுவார்” என்றனர். அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனையும் தகவல் தெரிவித்துள்ளது. விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என வெளியாகியிருக்கும் தகவல், தே.மு.தி.க தொண்டர்களுக்கு நிம்மதியை கொடுத்திருக்கிறது.
நன்றி
Publisher: www.vikatan.com
