`விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தொகுதி மாறி நிற்கப் போகிறார்’, `சிதம்பரம் தொகுதி இம்முறை வி.சி.க-வுக்கே இல்லை’ என்பது போன்ற தகவல்கள் அரசியல் களத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றன. இவ்வேளையில் நாடாளுமன்ற தேர்தலில் எந்தெந்த தொகுதிகளில் நிற்கப் போகிறது வி.சி.க… என்ன செய்யப் போகிறார் திருமா என்பெல்லாம் குறித்து விரிவாக விசாரித்தோம்.

நம்மிடம் பேசிய கட்சி விவரமறிந்தவர்கள், “நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் பொருட்டு தேர்தல் வேலைகளை வட மாவட்டங்களில் வேக வேகமாக செய்து வருகிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி. 2024 நாடாளுமன்ற தேர்தலில் திருமா மீண்டும் சிதம்பரம் தொகுதியில் நிற்பது தொடர்பான விவாதங்கள் கட்சிக்குள் எழவே, தேர்தல் வேலைகளை மேற்கொள்வதற்காக வி.சி.க அமைத்த டீம் ஒன்றை சிதம்பரம் தொகுதியில், களமிறங்கி சர்வே செய்திருக்கிறார்கள்.
கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில், அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் கடலூர் மாவட்டத்திலுள்ள சட்டமன்ற தொகுதிகள் மட்டுமே திருமா-வுக்கு பாஸிட்டிவாக இருப்பதாக ரிப்போர்ட் ஆகியிருக்கிறது. வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் திருமா உறுதியாக வென்றாக வேண்டும், வெற்றி வாய்ப்புள்ள வேறு தொகுதிகள் என்னென்ன என்ற ஆராய்ச்சிகளும் கட்சிக்குள் நடந்துவருகிறது” என்றனர்.

வி.சி.க தலைமைக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம் “சிதம்பரம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பது திருமாவளவனின் விருப்பமாக இருந்தாலும், எந்த தொகுதி என்பது இழுபறியாகத்தான் உள்ளது. இதற்கிடையில் தி.மு.க மீண்டும் அதே தொகுதிகளை வி.சி.க-வுக்கு தருகிறதா அல்லது வேறு கணக்கு போடுகிறார்களா என்பதையும் பார்க்க வேண்டும். ஆகவே சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளுடன் சேர்த்து காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளில் அமைப்பு ரீதியாக கட்சியை வலிமைப்படுத்துவது, பூத் கமிட்டி நிர்வாகிகளை அமைப்பதென தேர்தல் வேலைகளை வேகப்படுத்தியுள்ளோம். அதேபோல் வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் மூன்று தொகுதிகளிலாவது நிற்க வேண்டும் அதுவும் தனிச்சின்னத்தில் போட்டியிடவே வேண்டும் என்பது திருமாவின் விருப்பம்” என்றனர்.
நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகர் ஜெகதீஸ்வரன், “2019 நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் தனிச்சின்னத்தில் போட்டியிட்ட திருமா அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளரைவிட 3,219 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றிபெற்றார். தற்போதும் சிதம்பரம் தொகுதியில் களநிலவரம் வி.சி.க-வுக்கு சற்று கடினமானதாக தான் இருக்கிறது. ஆகவே மீண்டும் வி.சி.க-வுக்கு சிதம்பரம் தொகுதியை தருவதற்கான தி.மு.க தயாராக இருக்காது.

பொதுவாகவே கூட்டணிக் கட்சிகளுக்கு ஒரே தொகுதியை மீண்டும் மீண்டும் வழங்குவதை தி.மு.க மட்டுமல்ல கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் எந்த அரசியல் கட்சியும் விரும்பாது. திரும்பத் திரும்ப மற்றவர்களுக்கு விட்டு தருவதால் அந்த தொகுதியில் தங்களின் செல்வாக்கு என்னாவது என்ற கேள்வியை நிச்சயமாகக் கட்சிக்குள் சீனியர்கள் எழுப்புவார்கள். அந்தவகையில் வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகளை மாற்றித்தரும் திட்டத்துடன்தான் இருக்கிறது தி.மு.க. அந்த வகையில் சிதம்பரம் தொகுதியை வி.சி.க-வுக்கு தரக்கூடாதென்பதில் உறுதியாக இருக்கிறார்கள், பதிலாக திருவள்ளூர் தொகுதியை விசிகவுக்கு ஒதுக்கலாம். அங்கேயே திருமா போட்டியிடுவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்னன.” என்றார்.
அறிவாலய வட்டாரங்களில் விசாரித்தபோது, “வி.சி.க-வுக்கு இரண்டு தொகுதிகள் தரவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது தி.மு.க. விழுப்புரம், சிதம்பரம் தொகுதிகளுக்கு பதிலாக காஞ்சிபுரம், திருவள்ளூர் தொகுதிகளை வி.சி.க-வுக்கு கொடுக்கலாமா என்ற பேச்சுகளும் அடிபடுகிறது, அதேபோல் தனிச்சின்னத்தில் போட்டியிடுவதை தி.மு.க தலைமை விரும்பவில்லை என்பதே நிதர்சனம்” என்றனர்.
நம்மிடம் பேசிய வி.சி.க தலைமை நிலையச் செயலாளர் பாலசிங்கம், “வி.சி.க தமிழகத்தில் அமைப்பு ரீதியாக வலிமையடைந்து, பொதுமக்களின் நம்பிக்கைகளை பெற்றுவரும் நிலையில் ஏற்கனவே கைவசமுள்ள தொகுதிகளைவிட கூடுதலான தொகுதிகளை கேட்பது இயல்புதானே. மேலும் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகள் மட்டுமல்ல, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட வட மண்டலத்திலுள்ள 14 நாடாளுமன்ற தொகுதிகளில் வி.சி.க களப்பணியாற்றுகிறது. 14 தொகுதிகளில் காஞ்சிபுரம், திருவள்ளூர், சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகியவை தனித் தொகுதிகளாக இருப்பதால் இதுபோன்ற பேச்சுகள் எழுந்திருக்கலாம்”. என்றவரிடம் மீண்டும் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளில் வி.சி.க போட்டியிடுமா என வினவினோம்.
அதற்கு, “இப்போதே சொல்ல முடியாது. தி.மு.க-வுடன் ஆலோசித்துதான் முடிவெடுக்க முடியும், வி.சி.க-வுக்கு வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளை எவை என்பதை ஆராய்ந்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறுவோம்” என்றார்.

நம்மிடம் பேசிய தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி “தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கின்றன நிலையில், இப்போதே இதுகுறித்தெல்லாம் வெளிப்படையாக பேசுவது தேர்தல் வெற்றியை பாதிக்கக் கூடும். ஆகவே தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அதற்கென குழு அமைக்கப்பட்டு, கூட்டணிக் கட்சிகள் எங்கெங்கே போட்டியிடுவார்கள் என்பது பற்றி முடிவெடுக்கப்படும்” என்றார் சுருக்கமாக.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com
