மாற்றுக் கட்சியிலிருந்து விலகிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் முன்னிலையில் இணையும் விழா நேற்று விழுப்புரத்திலுள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த வேல்முருகன் எம்.எல்.ஏ., “பெரியார், அம்பேத்கர், சுதந்திர போராட்ட தலைவர்கள் போன்றோரின் சிலைகளை அவமதிக்கின்ற விஷக்கிருமிகளை… ‘மனநலம் பாதிக்கப்பட்டவர், குடும்பத்தால் கைவிடப்பட்டவர்கள்’ என்றெல்லாம் சாக்கு சொல்லாமல், அவர்களைக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்து, தமிழக அரசு சிறைப்படுத்த வேண்டும்.

சாதிய மோதலைத் தூண்டுவதுபோல, சிலைகளை அவமதிக்கும் ஈனச் செயல்களைச் செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுடைய சொத்துகள் அனைத்தும் கண்டறியப்பட்டு அரசுடமையாக்கப்பட வேண்டும். ஆட்சிக் கட்டிலிலிருந்து இறங்குவதற்கு முன்பாக, நீண்டநாள் நிலுவையிலுள்ள மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு மசோதாவை பா.ஜ.க கையில் எடுத்திருக்கிறது. இது காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தீட்டப்பட்ட சட்ட மசோதா. தற்போது ஆட்சிக்கட்டிலிலிருந்து தூக்கி எறியப்பட்டு விடுவோமோ என்ற பயத்தின் காரணமாக, இந்த மசோதாவை மத்திய பா.ஜ.க அரசு தாக்கல் செய்திருக்கிறது. இது ஓட்டுக்காகதான் என்றாலும், நான் அதை வரவேற்கிறேன். சிலிண்டருக்கு 200 ரூபாய் குறைத்ததையும் வரவேற்கிறேன்.
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக 15-க்கும் மேற்பட்ட போராட்டங்கள், கண்டன பொதுக்கூட்டங்களையும் நாங்கள் நடத்தியிருக்கிறோம். இந்த காவிரி நீர் விவகாரத்தில், தற்போது கர்நாடகா காங்கிரஸ் அரசு செய்வது பச்சைத் துரோகம். இதை ஒரு காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பா.ஜ.க ஆண்டாலும், காங்கிரஸ் ஆண்டாலும் கர்நாடகக்காரர்கள் நமக்குத் துரோகம் செய்கிறார்கள். அதனால்தான் கடந்த தேர்தலிலும் சரி, இனி வரப்போகும் தேர்தல்களிலும் சரி காங்கிரஸ் கட்சியை ஆதரித்து நான் எங்கும் பிரசாரத்தில் ஈடுபடுவதில்லை. ‘எல்லா மக்களுக்கும் உரிய தண்ணீரைத் தர வேண்டிய மத்திய அரசு, ஏன் கர்நாடகா அணைகளில் நம் ராணுவத்தை நிறுத்தி உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் ஆணையம் வழங்கிய வரைவின் அடிப்படையில் தண்ணீரைத் திறந்துவிடக் கூடாது?’ என்பது என் கேள்வி. ஆதலால் மத்திய பாதுகாப்புப் படையை நிறுத்தி, கர்நாடக அரசிடமிருந்து உரிய காவிரி நீரை மத்திய அரசே உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில், காவிரி மேலாண்மை வாரியத்தின் கண்காணிப்பில் திறந்துவிட வேண்டும் என்பதுதான் என் கோரிக்கை.

கூட்டணியைப் பொறுத்தவரை, நாங்கள் தேர்தல் அரசியலை பார்க்கவில்லை. மக்களைப் பிளவுபடுத்தும், ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தைக் கொண்டு செயல்படும் பாஜக அரசு அகற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தான் நாங்கள் பயணிக்கிறோம். எங்கள் கூட்டணி, தேர்தல் பதவிக்கான கூட்டணி அல்ல..! இந்த தேசம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்ற கூட்டணி. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நானும் ஒரு சீட் கேட்கிறேன். தரவில்லை என்றாலும் பாசிச பா.ஜ.க-வை வீட்டுக்கு அனுப்புவதற்கு நான் தி.மு.க கூட்டணியில் இடம் பெறுகிறேன்.
அ.தி.மு.க – பா.ஜ.க மோதல் என்பது… இங்கு தமிழ்நாட்டை ஆண்ட அரசியல் கட்சியினுடைய குடுமியை பா.ஜ.க கையில் வைத்திருக்கிறது. எடப்பாடியிடம், அமித் ஷா எங்களுக்கு 20 சீட் வேண்டுமென்று கோரிக்கை வைத்ததாகவும், அதற்கு எடப்பாடி உடன்படாத காரணத்தினால் இன்றைக்கு எடப்பாடிக்கும் – அமித் ஷாவுக்கும் தேர்தல் பங்கீட்டில் ஏற்பட்ட இந்த முரணை பெரிதாக்கி, தனது சீட் பேர வலிமையை பா.ஜ.க-விடமிருந்து குறைத்து, தங்கள் கட்சி வேட்பாளர்களை அதிகம் நிறுத்துவதற்கான ஒரு யுக்தியைதான் எடப்பாடியும், அமித் ஷாவும் கையாண்டுகொண்டிருக்கிறார்கள்.

இது முழுக்க முழுக்க அரசியல்ரீதியான நகர்வுகள், பேச்சுகள். நேற்றைக்கு கூட்டணியைவிட்டு வெளியேறிவிட்டோம் என்றார்கள். ஆனால் இன்று, ‘இனிவரும் காலங்களில் அ.தி.மு.க-வின் இரண்டாம் கட்ட தலைவர்கள் கொஞ்சம் அடக்கி வாசியுங்கள்’ என்று சுற்றறிக்கை சென்றிருக்கிறது. ஆகவே, இது சீட் நோட்டுக்கான பேர அரசியலின் மறுவடிவம்” என்றார்.
நன்றி
Publisher: www.vikatan.com