சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக நீண்ட நாட்களாக நிற்கும் வாகனங்கள் (Vehicle) ஏலம் விடப்படும் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் நீண்ட காலமாக சிலர் வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தி வைத்திருக்கின்றனர். இதுபோன்ற வாகனங்களால் அடிக்கடி விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தடுக்க மாநகராட்சி தரப்பிலும், போக்குவரத்து காவல்துறை தரப்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நீண்ட நாட்களாக சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் ஏலம் விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கூறுகையில், ”சென்னை மாநகராட்சி பகுதிகளில் நீண்ட காலமாக கேட்பாரற்று வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதனை அகற்றும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. வாகனங்களை நீண்ட காலமாக நிறுத்தி வைத்துள்ள வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மாநகராட்சி பகுதிகளில் 1,038 வாகனங்கள் கைவிடப்பட்ட நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து அப்புறப்படுத்த அறிவுறுத்தியுள்ளோம்.
அதன் பின்னரும், அப்புறப்படுத்தப்படாத வாகனங்கள் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சென்னை மாநகர காவல்துறை உதவியுடன் அப்புறப்படுத்தி ஏலம் விட முடிவு செய்துள்ளோம். போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருக்கும் வாகனங்கள், சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் வகையிலும் நீண்ட நாட்களாக நிற்கும் வாகனங்களை அதன் உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து அப்புறப்படுத்த வேண்டும்” என்று கூறினார்.
நன்றி
Publisher: 1newsnation.com
