அயோத்தியில் ராமர் கோயில் சிலை பிரதிஷ்டையை முன்னிட்டு, கோவை ஆர்.எஸ். புரம் அருகேயுள்ள ஸ்ரீ ராமர் பஜனை திருக்கோயிலில் பாஜக சார்பில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மேலும் அங்கு ஒரு வாகனத்தில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நேரலை எல்.இ.டி. திரையில் ஒளிபரப்பப்பட்டது.

இதில் பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். அப்போது பாஜகவினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், “இந்திய நாட்டின் மிகப்பெரிய வரலாற்று கலாசார சிறப்புமிக்க நாள் இன்று. 540 ஆண்டுகளுக்கு பிறகு ராமர் அயோத்தியில் எழுந்தருளி இருக்கிறார். இதற்காக எத்தனையோ லட்சம் பேர் போராட்டம் செய்து தங்களது உயிரை கொடுத்துள்ளனர். ராமர் கோயில் கும்பாபிஷேகம் பிரதமர் மோடி முன்னிலையில் சிறப்பாக நடந்துள்ளது. ராமர் கோயில் இந்திய தேசிய கலாசாரத்தின் அடையாளம்.

காந்தியின் கனவான ராம ராஜ்ஜியம் நோக்கி நாட்டை பிரதமர் மோடி எடுத்து சென்று கொண்டுள்ளார். ராமர் கோயில் உரிமையை உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் அடிப்படையில் இந்துக்கள் பொறுமையாக, சட்ட ரீதியாக உரிமையை பெற்றுள்ளார்கள். இக்கோயில் கட்ட அரசு செலவழிக்காமல், மக்கள் நன்கொடை மூலம் கோயில் கட்டப்பட்டுள்ளது. சீப்பை ஒழித்து வைத்தால் கல்யாணம் நின்று விடும் என்பது போல தமிழக அரசு செயல்படுகிறது.
கோயில்களில் சிறப்பு பூஜை, அன்னதானம் நடத்த அரசு அனுமதி மறுக்கிறது. நாட்டில் விரும்பும் தெய்வத்தை வழிபட அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமை நிகழ்வை நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. நாங்கள் பொய் சொன்னதாக தமிழக அரசு சொன்னது. ஆனால் பொய் பரப்புவது தமிழக அரசு தான். ஒருபக்கம் உரிமை மறுக்கவில்லை எனக்கூறிக் கொண்டு, காவல் துறையை வைத்து அரசு மிரட்டல் விடுக்கிறது. மொகலாயர் ஆட்சி, ஒளரங்கசீப் ஆட்சி அல்ல… வரி கட்டினால் தான் கோயிலுக்கு செல்ல முடியும் என்ற நிலையை திரும்ப கொண்டு வர முயற்சி செய்கிறது.

அது நடக்காது. அத்தனை மக்களையும் அரவணைப்பது தான் ராம் ராஜ்ஜியம். மக்களின் பக்தி உணர்வை அடக்க நினைத்தால், தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள். மக்களின் பக்தி உணர்வை திராவிட மாடல் அரசால் நிறுத்தி விட முடியாது. தமிழகம் ராமர் உடன் தொடர்புடைய மாநிலம். மோடிக்கு கிடைத்து வரும் அன்பு, ஆதரவை பார்க்க சகிக்காமல் அரசு முடக்க நினைக்கிறது. பாஜக மக்களின் உணர்வுகளோடு நிற்கிறது.
ராம நாமம் திமுகவிற்கு பதிலடி தரும். காவல் துறையினர் வழக்கு போட்டால், அதனை சந்திக்க தயார். நீதிமன்றம் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. திராவிட மாடல் இந்துக்களுக்கு எதிரான மாடல் என்பது மீண்டுமொரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு மக்களின் உணர்வை அரசு புரிந்து கொள்ள வேண்டும். அயோத்தி செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். 500 வருடத்திற்கு பிறகு ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.

500 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்எஸ்எஸ் இல்லை, பாஜக இல்லை. இதை புரிந்து கொள்ள வேண்டும். ராமர் மீதான நம்பிக்கையை ஒருபோதும் எந்த ஆட்சியாலும் மாற்ற முடியாது. நாங்கள் திமுகவினரை பயப்பட சொல்லவில்லை. சட்டத்திற்கு புறம்பாக பணம் வைத்துள்ளவர்கள் சிறைக்கு செல்கிறார்கள். அவ்வளவு தான்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
