உத்தரப்பிரதேசத்தில் அரசுப் பேருந்து ஒப்பந்த நடத்துனர் மற்றும் டிரைவர் ஆகியோர், பயணிகள் நமாஸ் செய்வதற்காகப் பேருந்தை நிறுத்தியதன் பின்னணியில் எந்தவொரு முன்னறிவிப்புமின்றி சஸ்பெண்ட் செய்யப்பட்டதால், நடத்துனர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து வெளியான தகவலின்படி, தற்கொலை செய்துகொண்ட நடத்துனர் மோஹித் யாதவ் என்று தெரியவந்திருக்கிறது. இவர் அரசுப் போக்குவரத்துத்துறையில் ஒப்பந்த தொழிலாளியாக மாதம் 17,000 ரூபாய் சம்பளம் வாங்கி வந்திருக்கிறார். எட்டு பேர்கொண்ட இவரின் குடும்பம், மோஹித் யாதவின் சம்பளத்தை நம்பி பிழைத்துவந்திருக்கிறது.

இந்த நிலையில் மோஹித் யாதவ், கடந்த ஜூன் மாதம் பரேலி-டெல்லி ஜன்ரத் நெடுஞ்சாலையில், பயணிகள் சிலர் நமாஸ் செய்வதற்காக, டிரைவரிடம் கூறி பேருந்தை நிறுத்தியிருக்கிறார். மேலும், பேருந்தில் பயணிகளிடம், “நாங்களும் இந்துக்கள்தான். இங்கு இந்து, முஸ்லிம் என்று எந்தப் பிரச்னையும் இல்லை. இரண்டு நிமிடங்கள் பேருந்தை நிறுத்துவதால் என்ன நடந்துவிடப்போகிறது” என்று மோஹித் யாதவ் கூறியிருக்கிறார். இதனை, பேருந்திலிருந்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியிருக்கிறார்.
நன்றி
Publisher: www.vikatan.com
