நாடாளுமன்ற மக்களவையில் பார்வையாளர்கள் மாடத்திலிருந்து இருவர் திடீரென எம்.பி-க்கள் அமர்ந்திருக்கும் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. அந்த இருவரும் அவையில் மஞ்சள் நிற புகையைப் பரப்பினர். அந்த இருவரையும் எம்.பி-க்கள் மடக்கினர்.

அதேசமயம், நாடாளுமன்றத்துக்கு வெளியே இரண்டு பேர் ஒருவித மஞ்சள் நிறப் புகையைப் பரப்பிக்கொண்டு, ஏதோ முழக்கமிட்டுக்கொண்டிருந்தனர். அவர்கள் நால்வரையும் கைதுசெய்த பாதுகாவலர்கள், தற்போது விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். அவர்களில் ஒருவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே, 2001-ம் ஆண்டு, டிசம்பர் 13-ல் இதே நாளில்தான், லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தது அந்தச் சமயத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இன்னொரு பக்கம், மேலும், இந்த மாதத் தொடக்கத்தில், காலிஸ்தான் ஆதரவாளர் குர்பத்வந்த் சிங் பன்னுன், “இந்திய ஏஜென்சிகளால் என்னைக் கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. என்னைக் கொல்வதற்குத் திட்டம் தீட்டியதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக டிசம்பர் 13 அல்லது அதற்கு முன்னர் நாடாளுமன்றத்தைத் தாக்குவோம்” என மிரட்டல் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், இன்று இத்தகைய சம்பவம் அரங்கேறியிருக்கிறது. இது குறித்து நாடாளுமன்றத்துக்கு வெளியே பேசிய காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, “இரண்டு இளைஞர்கள் பார்வையாளர்கள் மாடத்திலிருந்து குதித்தனர். அவர்கள் தங்கள் கைகளில் புகைக்குண்டுகள்போல எதையோ வைத்திருந்தனர். அதிலிருந்து மஞ்சள் நிறப் புகை வெளியேறியது. எம்.பி-க்களால் பிடிக்கப்பட்ட அவர்களை, பாதுகாப்புப் படையினர் வெளியே கொண்டு வந்தனர். அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இது நிச்சயமாக ஒரு பாதுகாப்பு மீறலாகும், ஏனென்றால் 2001-ல் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தவர்களின் நினைவுதினத்தை இன்று அனுசரிக்கிறோம்” என்று கூறினார். இன்னும் சில எம்.பி-க்கள் `இது கடுமையான பாதுகாப்பு மீறல்’ என்று கூறினர்.
நன்றி
Publisher: www.vikatan.com
