இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கியதிலிருந்து, அடர்த்தியாக மக்கள் வாழும் காஸா பகுதியில் தொடர் வான்வழி, தரைவழித் தாக்குதல்கள் இஸ்ரேல் படைகளால் நடத்தப்படுகின்றன. தண்ணீர், உணவு, மருந்துப் பொருள்கள் பற்றாக்குறை, பாதுகாப்பான இடம்கூட வழங்காமல், அகதிகள் முகாம்கள்மீதும் மருத்துவமனைகள்மீதும் நடத்தப்படும் தாக்குதல் என, இஸ்ரேலின் நடவடிக்கைகள் ஒட்டுமொத்த உலகையும் தொடர்ந்து அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. இந்த நிலையில், இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா தீர்மானம் கொண்டுவந்தபோது, இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரிட்டிஷ் கொலம்பியா செய்தி மாநாட்டில் கலந்துகொண்டார்.

அதில், இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கியதிலிருந்து முதன்முறையாக இஸ்ரேலைக் கண்டித்துப் பேசினார் ட்ரூடோ. அந்த மாநாட்டில் பேசிய அவர், “அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட நிலத்தின் கடும் சூழல் குறித்து, உலக அளவில் கவலைகள் அதிகரித்து வருகின்றன. ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் போரில் ஏற்கெனவே 11,000-க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகிவிட்டன. 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, நிர்க்கதியாக இடம்பெயர்ந்திருக்கிறார்கள். மின்சாரமின்றி, புதிதாகப் பிறந்த குழந்தைகளைச் சூடாக வைக்கப்பயன்படும் இன்குபேட்டர்களைக்கூட இயக்க முடியாமல், குழந்தைகள் அடுத்தடுத்து கிடத்தப்பட்டதைப் பார்த்தபோது, இதயம் உடைந்தது.
மனிதாபிமான நெருக்கடிகள் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. காஸாவின் அல் ஷிஃபா மருத்துவமனையிலுள்ள 39 குறைமாதக் குழந்தைகளில், 3 குழந்தைகள், இன்குபேட்டர்களை இயக்கும் மின் ஜெனரேட்டர்களுக்கு எரிபொருள் இல்லாததால், இறந்திருக்கின்றன. போரில் இஸ்ரேல் அரசு அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அங்கு நடப்பவற்றை ஒட்டுமொத்த உலகமும், தொலைக்காட்சியிலும் சமூக ஊடகங்களிலும் பார்த்துக்கொண்டிருக்கிறது.

மருத்துவர்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள், உயிர்பிழைத்தவர்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள் ஆகியோரின் சாட்சியங்களை, தொடர்ந்து கேட்டுவருகிறோம். பெண்கள், குழந்தைகள், சிசுக்களைக் கொல்வதை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதற்கு யார் பொறுப்பு… எனவே, இது நிறுத்தப்பட வேண்டும்” என வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளிக்கும்விதமாகத் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, “வேண்டுமென்றே பொதுமக்களைக் குறிவைத்து கொலைசெய்வது இஸ்ரேல் அல்ல.
ஹோலோகாஸ்டு (ஹிட்லர் ஆட்சியில் நடைபெற்ற யூதர்களுக்கு எதிரான நடவடிக்கை)க்குப் பிறகு யூதர்கள்மீது நிகழ்த்தப்பட்ட மிக மோசமான கொடூரங்களாகப் பொதுமக்களின் தலையைத் துண்டித்து, எரித்து, படுகொலைசெய்தது ஹமாஸ். பொதுமக்களைப் பாதிப்பிலிருந்து காப்பாற்ற இஸ்ரேல் அனைத்தையும் செய்து வரும் அதே வேளையில், ஹமாஸ் தீங்கு விளைவிக்காமல் இருக்கவும், அனைத்தையும் செய்து வருகிறது. இஸ்ரேல், காஸா மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் பாதுகாப்பான இடங்களில், அவர்களுக்குத் தேவையானவற்றை வழங்குகிறது.

ஆனால், ஹமாஸ் துப்பாக்கிமுனையில் அவர்கள் (காஸா மக்கள்) வெளியேறுவதைத் தடுக்கிறது. எனவே, பொதுமக்களுக்குப் பின்னால் மறைந்திருந்து பொதுமக்களைக் குறிவைத்து இரட்டைப் போர்க் குற்றத்தைச் செய்ததற்குப் பொறுப்பேற்க வேண்டியது இஸ்ரேல் அல்ல ஹமாஸ். ஹமாஸின் கொடூரமான நடவடிக்கையை முறியடிக்க நாகரிக சக்திகள் இஸ்ரேலை ஆதரிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
நன்றி
Publisher: www.vikatan.com
