`தமிழகத்தின் தலைநகராக திருச்சி மாறும்’ என தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் அண்மையில் பேசியிருந்தார். ஆனால் துரைமுகனின் கருத்து, தி.மு.க-வின் முன்னாள் தலைவர் கருணாநிதியின் விருப்பத்துக்கு மாறாக இருப்பது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

கடந்த நவம்பர் 28-ம் தேதி திருச்சி மாவட்டத்துக்கு கட்சி ரீதியாக பயணம் மேற்கொண்டிருந்தார் தி.மு.க பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன். திருச்சி தெற்கு மாவட்ட கருத்துரை கூட்டத்தில் பங்கேற்று பேசியபோது அமைச்சர் அன்பில் மகேஸின் செயல்பாடுகளை பாராட்டி பேசினார் அதனை தொடர்ந்து, “தமிழகத்தின் மத்தியில் அமைந்துள்ள திருச்சி, மாநிலத்தின் தலைநகர் ஆகும் காலம் வரும்” என்றும் பேசியிருந்தார்.

நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர்கள் சிலர், “திருச்சியை தலைநகராக்க வேண்டும் என 1983-ம் ஆண்டே விரும்பினார் அன்றைய முதலமைச்சரும் அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆர். திருச்சியை தலைநகராக்கி அங்கேயே தலைமை செயலகத்தை அமைத்திட வேண்டுமென மும்முரமாக இருந்தார். அதற்கு சென்னையின் தண்ணீர் பஞ்சமும் இட நெருக்கடியும் காரணங்களாக குறிப்பிட்டார் எம்.ஜி.ஆர். மேலும் தமிழகத்தின் தென்மாவட்ட மக்கள் தலைமை செயலகம் வந்துசெல்வதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதாகவும் தெரிவித்தனர். ஆனால் அன்றைய அரசியல் சூழலில் அதுமுடியாமல் போய்விட்டது.
எம்.ஜி.ஆர் திருச்சியை தலைநகராக்க வேண்டும் எனப் பேசியபோது அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார் அன்றைய தி.மு.க தலைவர் கருணாநிதி, எம்.ஜி.ஆர் அரசு ஊழல் குற்றசாட்டுகளை திசைதிருப்பவும், சென்னை தி.மு.க-வின் கோட்டையாக இருப்பதால்தான் அ.தி.மு.க அரசு இப்படி செய்கிறது எனக் கூறி கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார்” என்றனர்.

இந்நிலையில் தி.மு.க அமைச்சர் எம்.ஜி.ஆரின் நிலைப்பாட்டை ஆமோதிக்கும் வகையிலும், தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதியின் கருத்துக்கு எதிராகவும் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், தமிழ்நாட்டின் தலைநகர் குறித்த பேச்சுகள் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோதும் எழுந்தன.
2020-ல் திருச்சியை தலைநகராக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார் அப்போதைய அ.தி.மு.க அமைச்சர் வெல்லமண்டி நடராஜன். அதேபோல் மதுரையை தலைநகராக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர் அ.தி.மு.க அமைச்சர்கள் செல்லூர் ராஜூவும் ஆர்.பி உதயகுமாரும். ஆனால் அவை வெறும் பேச்சாகவே கடந்துவிட்டன.

தமிழ்நாட்டின் தலைநகரை மாற்ற வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் விருப்பத்தை நிறைவேற்ற அ.தி.மு.கவே இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்திடாத நிலையில், தி.மு.க அமைச்சர் துரைமுருகனின் கருத்து கவனம் பெற்றிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com
