போக்குவரத்துத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பல மாதங்களாக வழங்கப்படாமல் இருக்கும் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும், ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை போக்குவரத்துத் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகிறார்கள்.

இந்த நிலையில், தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி போக்குவரத்து அனைத்துத் தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வுபெற்றோர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடந்த டிசம்பர் 19-ம் தேதி வேலைநிறுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, ஜனவரி 4-ம் தேதிக்குப் பிறகு வேலைநிறுத்தத்தில் ஈடுபட அவர்கள் திட்டமிட்டனர்.
அதைத் தொடர்ந்து, தொழிற்சங்கங்களுக்கும் நிர்வாகத் தரப்புக்கும் இடையே ஜனவரி 3-ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. சி.ஐ.டி.யு., அண்ணா தொழிற்சங்கப் பேரவை உள்பட 23 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தொழிற்சங்கப் பிரதிநிதிகள், ‘தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து உறுதியான வாக்குறுதி எதையும் அதிகாரிகள் வழங்கவில்லை. பேச்சுவார்த்தை திருப்தி அளிக்கவில்லை. எனவே, ஜனவரி 9-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் இறங்க முடிவெடுத்துள்ளோம்’ என்றனர்.
பொங்கல் பண்டிகை நெருங்கிவரும் வேளையில், போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்த அறிவிப்பு தமிழக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னையில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். அவர்களில் பெரும்பாலோர் அரசுப் பேருந்துகளில் பயணிப்பவர்கள். எனவே, தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த முடிவைக் கைவிட வேண்டும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில், 14-வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை உரிய காலத்தில் முடிக்கப்படவில்லை. அதனால், தொழிலாளர்கள் நிர்கதியாகினர். முதல்வர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகுதான், தொழிற்சங்கங்களின் முக்கியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், புதிய பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கி, புதிய பணியாளர்கள் நியமனத்துக்கு அனுமதி அளித்து துறை சிறப்பாக செயல்பட முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். தீபாவளி போனஸ் அ.தி.மு.க ஆட்சியில் குறைவாக வழங்கப்பட்டதை, யாரும் கோரிக்கை வைக்காமலேயே மீண்டும் 20 விழுக்காடு உயர்த்தி ரூ.16,800 வழங்கப்பட்டது. போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு, வாரிசு அடிப்படையில் பணி போன்றவற்றையும் தி.மு.க அரசு நிறைவேற்றியிருக்கிறது’ என்று கூறியிருக்கிறார்.

சென்னையிலும், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் மழைவெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீர்செய்ய முதல்வர் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், முழு அரசு இயந்திரமும் இந்தப் பணியில் ஈடுபட்டு வரும் சூழலில், வேலைநிறுத்தத்தை போக்குவரத்துத் தொழிலாளர்கள் கைவிட வேண்டும் என்பது அமைச்சரின் வேண்டுகோளாக இருக்கிறது. கோரிக்கைகள் குறித்து பொங்கல் விடுமுறைக்குப் பிறகு பேசிக்கொள்ளலாம் என்பதும் அமைச்சரின் நிலைப்பாடாக இருக்கிறது.
ஆனால், மற்ற நேரத்தில் போராட்டம் நடத்தினால், அதனால் அரசுக்கு ஒப்பீட்டளவில் பெரிய அழுத்தம் இருக்காது. ஆனால், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் வரும் காலத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், அது அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும். அதை அறிந்துதான், பொங்கல் வரும் நேரத்தை தங்கள் போராட்டத்துக்கு தொழிற்சங்கங்கள் தேர்ந்தெடுத்திருக்கின்றன.

எனவே, தங்கள் கோரிக்கைகள் நிறைவேறாமல் தொழிற்சங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவது சாத்தியமல்ல என்றே தெரிகிறது. இது, அரசுக்குக்கும் நன்கு தெரியும். தொழிலாளர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்பதால், அவற்றை அரசால் ஒட்டுமொத்தமாக நிராகரிக்க முடியவில்லை. ஆறு கோரிக்கைகளில் ஒன்றிரண்டு கோரிக்கைகளையாவது நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் அரசுக்கு இருக்கிறது. என்ன நடக்கும் என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
