தி.மு.க அரசு, தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான `குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000′ என்ற திட்டத்தை ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகளுக்குப் பின், பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான இன்று நடைமுறைக்கு கொண்டுவந்திருக்கிறது. இதற்கான அறிவிப்பை, இந்தாண்டுக்கான பட்ஜெட் தாக்கலின்போது தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு செப்டம்பர் 15-ம் தேதி முதல் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர், இந்த திட்டத்துக்கு `கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து, மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான தகுதிகள் எனப் பலவற்றை அடிக்கோடிட்டு, தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளைக் கண்டறியும் விதமாக இரண்டு கட்டங்களாக விண்ணப்பங்களைப் பதிவுசெய்யும் பணிகளை மேற்கொண்ட தமிழக அரசு, இறுதியாக 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து, யார் யார் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டிருக்கின்றன, நிராகரிக்கப்பட்டிருக்கின்றன என்பதை அவரவர்க்கு அரசு மெசேஜ் அனுப்பியது. இதில், சுமார் 50 லட்சம் பேர் நிராகரிக்கப்பட்டனர்.
பின்னர், விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட குடும்பத்தலைவிகளின் வாங்கி கணக்குக்கு ரூ.1-ஐ அனுப்பி செயல் முன்னோட்டம் பார்த்த அரசு, நேற்று சிலரின் வாங்கி கணக்குக்கு ரூ.1,000 அனுப்பியது. மேலும், திட்டம் நடைமுறைக்கு வந்த ஐந்து நாள்களில், அதாவது செப்டம்பர் 20-ம் தேதிக்குள் பயனர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டுவிடும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், அண்ணா பிறந்தநாளில் அவரின் சொந்த ஊரான காஞ்சிபுரத்தில், 1.06 கோடி பேருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். முன்னதாக அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மதியாதை செய்தார் முதல்வர் ஸ்டாலின்


கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு இந்த திட்டம் குறித்த கையேடு ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. அதில், பணத்தை சேமிப்பது குறித்த தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கையேடுவில் முதல்வர் ஸ்டாலின், “ மகளிர் உரிமை திட்டம் இரண்டு நோக்கங்களைக் கொண்டது. பிரதிபலன் பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்கு கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது. அடுத்த ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமை தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக இருந்து, வறுமையை ஒழித்து, வாழ்க்கை தரத்தை உயர்த்தி, சுயமரியாதையோடு சமூகத்தில் அவர்கள் வாழ்வதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்” என்பது ஆகும் என குறிப்பிட்டுள்ளார்.
நன்றி
Publisher: www.vikatan.com
