அயோத்தி ராமர் கோயில், வரும் 22-ம் தேதி பிரதமர் மோடி முன்னிலையில் திறப்பு விழா காணவிருக்கிறது. “பிரதமர் மோடி மட்டுமல்லாது, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க முதல்வர்கள் என இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி பதவிப் பிரமாணம் செய்துகொண்ட ஆட்சியாளர்கள் பலர் கலந்துகொண்டு, தனிப்பட்ட மத நிகழ்வை அரசு நிகழ்ச்சியாகவே மாற்றவிருக்கின்றனர்” என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சியினர் முன்வைத்து வருகிறார்கள்.

இதனாலேயே, `மதச்சார்பற்ற இந்தியாவில், தேர்தல் அரசியல் ஆதாயத்துக்காகப் பெரும்பான்மையாக இருக்கும் இந்து மத நிகழ்வை ஆளும் அரசு நடத்துகிறது’ என எதிர்க்கட்சிகள் விமர்சித்து, கோயில் திறப்பு விழாவில் கலந்துகொள்வதைத் தவிர்த்து வருகின்றன. காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே , சோனியா காந்தி ஆகியோர், `இது ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க-வின் அரசியல் திட்டம். மதம் என்பது தனிப்பட்ட உரிமை’ என்று கூறி திறப்பு விழாவில் கலந்துகொள்ள மாட்டோம் எனத் தெரிவித்துவிட்டனர். இதனால், `இந்து மத உணர்வுகளைக் காங்கிரஸ் புண்படுத்துகிறது, அவமதிக்கிறது’ என பா.ஜ.க சாடுகிறது.
அதேசமயம், `சனாதன தர்மத்தை மீறி திறப்பு விழா நடக்கிறது. இதனால் நாங்கள் கலந்துகொள்ள மாட்டோம்’ என நான்கு சங்கராச்சாரியார்கள் வெளிப்படையாகவே கூறிவிட்டனர். இருப்பினும், காங்கிரஸை ஒருபக்கம் தொடர்ந்து விமர்சித்துக்கொண்டே, திறப்பு விழாவுக்கான வேலைகளை பா.ஜ.க தொடர்ந்து செய்துகொண்டே வருகிறது. இந்த நிலையில், கோயில் திறப்பு விழாவுக்குத் தயாராகும் வகையில் 11 நாள்கள் சடங்குகளை மோடி இன்று தொடக்கிவைத்தார். அதோடு, மோடி தனது X சமூக வலைதளப் பக்கத்தில், நாட்டு மக்களுக்கு ஆடியோ கிளிப் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.

அந்த 10 நிமிட ஆடியோ கிளிப்பில், “நான் உணர்ச்சிவசப்படுகிறேன். என் வாழ்க்கையில் முதன்முறையாக, இது போன்ற உணர்வுகளை நான் அனுபவிக்கிறேன். நம் சாஸ்திரங்கள் சொல்வதுபோல், கடவுளின் யாகத்திற்கு, வழிபாட்டுக்கு நமக்குள் இருக்கும் தெய்வீக உணர்வை எழுப்ப வேண்டும். இதற்காக, பிரதிஷ்டைக்கு முன்பு கடைப்பிடிக்க வேண்டிய பிரமாணங்களையும், கடுமையான விதிகளையும் சாஸ்திரங்கள் பரிந்துரைக்கின்றன. இந்த ஆன்மிகப் பயணத்தில் துறவிகளிடமிருந்து நான் பெற்ற வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இன்று முதல் 11 நாள்கள் சிறப்பு சடங்குகளைத் தொடங்குகிறேன். நானே விரும்பினாலும், இதன் ஆழத்தை என்னால் வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அதேசமயம், என் நிலையை உங்களால் புரிந்துகொள்ள முடியும். பல தலைமுறைகள் பல வருடங்களாகக் காத்து வந்த கனவு இது. அதை நிறைவேற்றுவதில் நான் முன்னிலையில் இருப்பது என்னுடைய அதிர்ஷ்டம். இறைவன் என்னை அனைத்து இந்தியர்களின் பிரதிநிதியாக உருவாக்கியிருக்கிறார். இதில் நான் ஒரு கருவி மட்டுமே. இது மிகப்பெரிய பொறுப்பு. எனவே, மக்களிடத்தில் ஆசீர்வாதங்களைப் பெற விரும்புகிறேன்” என்று மோடி கூறியிருக்கிறார்.
நன்றி
Publisher: www.vikatan.com
