மும்பையில் நாட்டின் முதல் மோனோ ரயில் சேவை செம்பூரில் இருந்து வடாலா வழியாக ஜேக்கப் சர்க்கிள் வரை அமைக்கப்பட்டது. இந்த மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்போதே கடுமையான விமர்சனம் வந்தது.
மோனோ ரயில் தடம் செல்லும் வழி மக்கள் நெருக்கம் இல்லாத பகுதியாகும். இதனால் இத்திட்டம் தோல்வியில்தான் முடியும் என்று ஆரம்பத்திலேயே விமர்சனம் செய்யப்பட்டது.
அதோடு மோனோ ரயில் சேவை தொடங்கப்பட்டதில் இருந்தே இதற்கு பிரச்னை வந்துகொண்டே இருக்கிறது. ஏற்கெனவே மலேசியாவில் இருந்து வாங்கப்பட்ட மோனோ ரயில்களில் சில ரயில்கள் பழுது மற்றும் உதிரி பாகங்கள் இல்லாமல் ஓரங்கட்டப்பட்டுள்ளது. இதனால் புதிதாக 10 மோனோ ரயில் வாங்க மும்பை மெட்ரோபாலிடன் மேம்பாட்டு ஆணையம் ஆர்டர் கொடுத்து இருக்கிறது.

இந்த மோனோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது. மோனோ ரயில் தடம் செல்லும் வழியில் பெரிய அளவில் தொழிற்சாலைகளோ அல்லது மக்கள் குடியிருப்புகளோ இல்லை. இதனால் இத்திட்டம் தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
2019 -ம் ஆண்டு இத்திட்டத்தின் இரண்டாம் பகுதியை அப்போதையை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தொடங்கி வைத்தபோது இந்த வழித்தடத்தில் தினமும் ஒரு லட்சம் பயணிகள் பயணம் செய்வார்கள் என்று சொன்னார். ஆனால் அவர் சொல்லி நான்கு ஆண்டுகளான பிறகும் பயணிகள் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக்கூட எட்டவில்லை. தற்போது தினமும் வெறும் 10 ஆயிரம் பேர் மட்டும் பயணம் செய்து வருகின்றனர்.
மோனோ ரயில் சேவை மூலம் ஆண்டுக்கு 12 கோடி ரூபாய் முதல் 13 கோடி ரூபாய் மட்டுமே வருமானம் கிடைக்கிறது. ஆனால், கடந்த நிதியாண்டில் இத்திட்டத்திற்கு ரூ.250 கோடி செலவாகி இருக்கிறது.
நடப்பு நிதியாண்டில் புதிய மோனோ ரயிலுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டு இருப்பதால் நஷ்டம் ரூ.529 கோடியாக அதிகரிக்கும் என்று மும்பை மெட்ரோபாலிடன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது தினமும் 118 சேவை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனை தினமும் 250 ஆக அதிகரிக்க எம்.எம்.ஆர்.டி.ஏ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், இத்திட்டத்தின் மூலம் நாளுக்கு நாள் அரசுக்கு நஷ்டம் தான் ஏற்படும் என்று ஓய்வு பெற்ற மும்பை மெட்ரோபாலிடன் (எம்.எம்.ஆர்.டி.ஏ) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இத்திட்டத்தின் மூலம் நஷ்டம் ஏற்பட்டு வருவது குறித்து எம்.எம்.ஆர்.டி.ஏ.அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அமைச்சக அதிகாரிகளை சந்தித்து பேசினர். மேலும், புதிய மோனோ ரயில்கள் வாங்கவேண்டுமா என்றும் கேட்டுக்கொண்டனர்.
புதிய ரயில்கள் வாங்கி இயக்கி அதிலும் பெரிய அளவில் பயணிகள் பயணம் செய்யவில்லை என்றால், நஷ்டம் மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் அரசை எச்சரித்துள்ளனர்.
இது குறித்து ஓய்வு பெற்ற மூத்த எம்.எம்.ஆர்.டி.ஏ.அதிகாரி ஒருவர் கூறுகையில், ”மோனோ ரயில் திட்டம் மிகவும் மோசமாக திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, இதில் நஷ்டத்தைக் குறைப்பது மிகவும் கஷ்டம். எனவே, இத்தடத்தை தொடர்ந்து செயல்பாட்டில் வைத்திருப்பதைவிட மூடிவிடுவது நல்லது” என்று தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தை என்ன செய்வது என்று அரசு பரிசீலனையில் இருக்கிறது. மோனோ ரயில் மட்டுமல்லாது, சமீப காலத்தில் மும்பையில் தொடங்கப்பட்ட இரண்டு மெட்ரோ ரயில் வழித்தடத்திலும் கடுமையான இழப்பு ஏற்பட்டு வருகிறது.
கடந்த மார்ச் வரை 280 கோடி அளவுக்கு இந்த இரண்டு வழித்தட மெட்ரோ ரயில் சேவை மூலம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இரண்டு வழித்தடத்திலும் தினமும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பயணம் செய்த போதிலும் கடந்த நிதியாண்டில் இரண்டு தடத்திலும் வெறும் 43 கோடி அளவுக்கு மட்டுமே வருமானம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது!
நன்றி
Publisher: www.vikatan.com
