`பெண்களின் அறிவு, ஆற்றலை பார்ப்பது கிடையாது; நிறம்,

“ஆண்களைவிட பெண்களுக்குத்தான் நிர்வாகத்திறமை அதிகம். வீட்டில் சாதித்த பெண்கள் பொது வாழ்க்கையிலும் வெற்றி பெற முடியும்…” என்று தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் பேசினார்.

தமிழிசை சௌந்தரராஜன்

மதுரையில் கேசவ சேவா கேந்திரம் சார்பில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில், தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “ஒவ்வொரு பெண்ணும் ஆயிரம் ஆண்களுக்குச் சமமானவர். பெண்கள் தங்களை மகிழ்விக்காமல் திருப்திப்படுத்தாமல் மற்றவர்களையும் உலகத்தையும் மாற்ற முடியாது. நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால்தான், வீடும் நாடும் மகிழ்ச்சியாக இருக்கும்.

அரசியலுக்கு பெண்கள் அதிகம் வரவேண்டும். சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு கிடைக்கப் போகிறது, இதற்கு முன் ஆட்சி புரிந்தவர்கள் பெண்களுக்கு இட ஒதுக்கீடு தருவோம் என கூறினார்கள். ஆனால் பிரதமர் மோடி பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா கொண்டு வந்துள்ளார்.

தமிழிசை சௌந்தரராஜன்

பெண்களின் வாழ்க்கை பாதை என்பது கற்களாலும், முட்களாலும் ஆன பாதை. நான் ஆளுநராக வருவதற்கு முன் எவ்வளவு கடுமையான பாதைகளை கடந்து வந்தேன் என்பது உங்களுக்கு தெரியும். இங்கு நம் அறிவை ஆற்றலை, திறமையை பார்ப்பது கிடையாது, மாறாக நிறம், அழகு, உயரத்தைப் பார்க்கிறார்கள். வெளித்தோற்றம் என்பது வீணானது. உள்ளே எவ்வளவு உறுதியாக இருக்கிறோம் என்பதே முக்கியம். வெளித்தோற்றத்தை மற்றவர்கள் எவ்வளவு ஏளனம் செய்கிறார்களோ உள்ளுக்குள் அந்தளவு நாம் சக்தி மிகுந்தவர்களாக பரிணமிக்க வேண்டும்

ஆண்களைவிட பெண்களுக்குத்தான் நிர்வாகத்திறமை அதிகம். வீட்டில் சாதித்த பெண்கள் பொது வாழ்க்கையிலும் வெற்றி பெற முடியும், பெண்களால் அவியலும் செய்ய முடியும், அரசியலும் செய்ய முடியும், உலகில் பெண்களால் சாதிக்க முடியாதது என எதுவும் இல்லை, இந்திய காலாசரமும், பண்பாடும்தான் கொரானாவிலிருந்து மக்களைக் காப்பாற்றியது. சத்தான பாரம்பர்ய உணவுகளை எடுத்துக் கொண்டதனால் கொரோனாவிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடிந்தது.

தமிழிசை சௌந்தரராஜன்

வாழ்வில் எத்தனை சோதனைகள் வந்தாலும், பெண்கள் தன்னம்பிக்கையை விட்டுவிடக் கூடாது” என்றார்.

தொடர்ந்து பேசியவர், “ஒரு மனைவி நினைத்தால் நாத்திக கணவரைக்கூட ஆத்திகராக மாற்றிவிடுவார்” என்று ஒரு குட்டிக்கதையைக் கூறிவிட்டு, “தமிழ்நாட்டு முதல்வர் குடும்பத்தைப் பற்றி கூறுகிறேன் என்று நினைக்க வேண்டாம்” என்று கூறிவிட்டு, சிரித்தபடியே முடித்துக்கொண்டார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *