இஸ்ரேல் போர் காரணமாக ‘ஆபரேஷன் அஜய்’ மூலமாக இந்தியா திரும்பியவர்களில், 22 தமிழர்கள் டெல்லியிலிருந்து தமிழகத்திலுள்ள அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதில் இஸ்ரேல் பல்கலைக்கழகத்தில் பயின்ற தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் ராஜ்குமார், டெஃபில்லா, பகவதி, மனோஜ், தன்யா, நிரதிகா, ஷாலினி, ஏஞ்சல் ஆகிய 8 பேர், விமானம் மூலம் மதுரை வந்தடைந்தனர். அவர்களை மதுரை கலெக்டர் சங்கீதா, காவல்துறை அதிகாரிகள் வரவேற்றனர்.
வந்திருந்த மாணவர் பகவதி செய்தியாளர்களிடம் பேசும்போது, “இஸ்ரேலில் உள்ள பெர்லான் யுனிவர்சிட்டியில் இரண்டு ஆண்டுகளாக படித்து வருகிறேன். தற்போது அங்கு போர்ச்சூழல் ஏற்பட்டுள்ளதால், இந்திய மாணவர்கள் தற்காலிகமாக இந்தியா திரும்பியுள்ளோம்.

சூழல் சரியான பிறகு, மீண்டும் அங்கு சென்று எங்கள் ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்வோம். நாங்கள் இருந்தது பாதுகாப்பான பகுதிதான். ஆனாலும் எங்கள் பெற்றோர்கள் பதற்றம் அடைவதால்தான் நாங்கள் இந்தியா திரும்பினோம்.
இந்திய அரசாங்கமும் தமிழக அரசு இணைந்து எங்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்துள்ளார்கள். இஸ்ரேல்-இந்திய உறவு மிகவும் சிறப்பாக உள்ளது. போர் பதற்றம் முடிந்த பிறகு நிச்சயம் மீண்டும் என் ஆராய்ச்சியை அங்கு மேற்கொள்வேன். இஸ்ரேல் அரசாங்கமும் எங்கள் செயல்பாடுகள் குறித்து விசாரித்துக் கொண்டே இருந்தார்கள்.
எல்லையில் உள்ள தமிழர்கள் சற்று பதற்றமாகத்தான் உள்ளார்கள். மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளார்கள். இஸ்ரேலில் படிக்கும் இந்திய மாணவர்கள் ஆயிரம் பேர் ஒரே வாட்ஸ்அப் குரூப்பில் இந்தியன் எம்பஸியுடன் தொடர்பில் உள்ளோம். எந்த குறையும் எங்களுக்கு இல்லை” என்றார்.

மாணவி ஏஞ்சல் பேசும்போது, “போர் பதற்றம் காரணமாக அங்குள்ள மாணவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாக இருந்தது. பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டிலிருந்து வரும் மாணவர்களுக்காக அவசரகால பயிற்சிகளை அளித்தனர்.
துப்பாக்கிச் சுடும் சத்தங்களை கேட்கும்போது பதற்றம் இருந்தது. அதே நேரம் எந்தவித குழப்பமும் இல்லாமல் மத்திய மாநில அரசுகள் எங்களை அழைத்து வந்தனர். நான் மூளை சம்பந்தமான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதால் வீட்டிலிருந்தபடி ஆன்லைன் மூலம் வேலை செய்வதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுத்துள்ளார்கள்.” என்றார்.
பின்பு ஒவ்வொரு மாணவரும் அவரவர் வீடுகளுக்கு கிளம்பிச் சென்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
