சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு துவங்கியது!
சென்னை உயர் நீதிமன்றத்தில் பழைமையான வழக்கறிஞர் சங்கமாக சென்னை உயர் நீதிமன்றம் வழக்கறிஞர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட்டு வந்தது. கடைசியாக கடந்த 2016 நவம்பர் 23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த 2018-ம் ஆண்டு முடிவடைந்தது. இந்நிலையில், சங்க தேர்தல் தொடர்பாக அறிவிப்புக்கும், தேர்தல் புதிய விதிகளுக்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் காரணமாக தேர்தல் தள்ளிப்போனது.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தலை நடத்த மூத்த வழக்கறிஞர் கபீரை தேர்தல் அதிகாரியாக நியமித்து உத்தரவிட்டது. அதன்படி, கடந்த ஜனவரி 9 ஆம் தேதி தேர்தல் அறிவிக்கபட்டது. வாக்குப்பதிவு தொடங்கியவுடன் வழக்கறிஞர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக தேர்தல் ரத்து செய்யபட்டது. இந்த சம்பவம் நடந்து ஓராண்டு நெருங்க உள்ள நிலையில் மீண்டும் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் சுமார் 4,752 வழக்கறிஞர்கள் வாக்களிக்க தகுதியுடையவர்கள்.இந்த தேர்தலில் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர், நூலகர், 6 மூத்த செயற்குழு உறுப்பினர்கள், 5 இளைய செயற்குழு உறுப்பினர்கள் என 16 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
இறுதி வேட்பாளர் பட்டியல்படி, 16 பதவிகளுக்கு 124 பேர் போட்டியிடுகின்றனர். காலை 10 மணிக்கு துவங்கியுள்ள வாக்கு பதிவு மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சங்க அலுவலக கட்டடத்தில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. உயர்நீதிமன்ற ஆவின் நுழைவாயில் வழியாக வழக்கறிஞர் வாக்களிக்க அனுமதிக்கபட்டுள்ளனர்.
மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF) மற்றும் மாநில காவல் துறையினரின் பாதுகாப்புடன் வாக்கு பதிவு நடந்து வருகிறது.
வாக்குபதிவு, மற்றும் வாக்கு எண்ணிக்கை முழுவதையும் www.mhaa.in என்ற என்ற இணைய தளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யபடவுள்ளது.
வாக்கு பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தவுடன் மாலை 6 மணிக்கு வாக்குகள் எண்ணிக்கை தொடங்கும். முதலில் தலைவர் பதவிக்கும், பின்னர் துணைத்தலைவர் பதவிக்கும், செயலாளர் பதவிக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
அடுத்த நாள் மற்ற பதவிகளுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வெற்றி பெற்றவர்கள் அடுத்த இரண்டு ஆண்டுகள் பதவியில் நீடிப்பார்கள்.
நன்றி
Publisher: www.vikatan.com
