போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம் தொடங்கியது!
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எப், பிஎம்எஸ் உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கியிருந்தனர். ஜனவரி 9 முதல் வேலைநிறுத்தம் நடைபெறும் என தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்தன. இந்நிலையில், 3-ம் கட்ட பேச்சுவார்த்தை, தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அதுவும்தோல்வியில் முடிந்ததால், நேற்று நள்ளிரவு முதலே வேலை நிறுத்த போராட்டத்தை ஊழியர்கள் தொடங்கியுள்ளனர்.

இதனால் இன்று குறைந்த அளவிலே பேருந்துகள் இயக்கப்படும் நிலை உள்ளது. அதே நேரம் பணிமனை, பேருந்து நிலையங்களில் பணிக்கு வரும் ஊழியர்களை தடுத்தாலோ, மக்களுக்கு இடையூறு செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார். இதனை கண்காணிக்க போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சென்னையில் போலீஸார் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் தேவையான அளவுக்கு பேருந்துகள் இயக்கப்படுமா என்பது சந்தேகம் தான். இந்த போராட்டத்தில் தொமுச தவிர, மக்கள் நலன் கருதி ஐஎன்டியூசி, வேலைநிறுத்தத்தில் பங்கேற்காது என அறிவித்துள்ளது.
இதனிடையே பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பேருந்துகளை சுமூகமாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் உறுதியளித்துள்ளார்.
நன்றி
Publisher: www.vikatan.com
