காஸா அகதிகள் முகாமில் குண்டு வீச்சு; ஹமாஸ் அமைப்பின் கமாண்டர் உட்பட 50 பேர் பலி என தகவல்!
இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. `ஹமாஸ் அமைப்பை அழித்தொழிக்கும் வரை ஓயப் போவதில்லை!” என இஸ்ரேல் திட்டவட்டமாகக் கூறிக்கொண்டு, காஸா-மீதான தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், பாலஸ்தீனத்தின் காஸா பகுதியிலுள்ள ஜபல்யா அகதிகள் முகாமின்மீது, இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இந்தத் தாக்குதலில் ஹமாஸின் மத்திய ஜபல்யா பட்டாலியனின் தளபதி இப்ராஹிம் பியாரி உட்பட 50 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்திருக்கின்றன.

ஆனால், ஹமாஸ் தனது தலைவர்களில் யாரும் ஜபல்யா அகதிகள் முகாமில் இல்லை என இத்தகைய தகவலை மறுத்ததிருக்கிறது. இந்தப் போரில் இதுவரை 3,542 குழந்தைகள், 2,187 பெண்கள் உட்பட 8,525 பேர் உயிரிழந்திருப்பதாக, பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. முற்றுகையிடப்பட்ட காஸா பகுதி, ஆயிரக்கணக்கான குழந்தைகளின் `புதைகுழியாக’ மாறியிருக்கிறது என ஐ.நா சபை வருத்தத்தையும், கண்டனத்தையும் பதிவுசெய்திருக்கிறது.
நன்றி
Publisher: www.vikatan.com
