இன்று தெலங்கானா மாநிலத்தில் உள்ள மெஹ்பூப்நகரில் 13,500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்து வைப்பது மற்றும் தொடங்கி வைப்பது போன்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். மெஹ்பூப் நகரில் இதற்கு முன்பு தற்போது முதல்வராக இருக்கும் சந்திரசேகர் ராவ் எம்.பி-யாக இருந்திருக்கிறார். நாளை பிரதமர் மோடி மத்தியப் பிரதேச மாநிலத்தில் குவாலியர் உட்பட இரண்டு இடங்களில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் குவாலியர் மற்றும் சம்பல் பகுதியில் பா.ஜ.க-விற்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. எனவே இம்முறை அங்கு கூடுதல் கவனம் செலுத்த பா.ஜ.க முடிவு செய்துள்ளது.

கட்சி பலவீனமாக இருக்கும் தொகுதியில் பிரபலமான தலைவர்களை தேர்தலில் நிறுத்த பா.ஜ.க முடிவு செய்துள்ளது. மூன்றாம் தேதி மீண்டும் பிரதமர் மோடி சத்தீஸ்கர் செல்கிறார். ஒரு காலத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்து காணப்பட்ட ஜக்தல்பூரில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
இதே போன்று மூன்றாம் தேதி பிரதமர் மோடி பேசவிருக்கும் தெலங்கானாவின் நிஜாமாபாத் தொகுதியில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா எம்.பி-யாக இருந்தவர் ஆவார். ஐந்தாம் தேதி ராஜஸ்தான் முதல்வரின் கோட்டையாக கருதப்படும் ஜோத்பூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டும் பிரசாரம் செய்கிறார். எனவே ஐந்தாம் தேதிக்குப் பிறகு சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு புறம் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் மக்களவைத் தேர்தலுக்கு தொகுதிகளை பங்கிட்டு கொள்வதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
நன்றி
Publisher: www.vikatan.com
