மணிப்பூர் கலவரம், நாடாளுமன்றத் தேர்தல், I.N.D.I.A கூட்டணியின் அடுத்தகட்ட செயல்திட்டங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியை தொடர்புகொண்டு பல்வேறு கேள்விகளை முன்வைத்தேன்…
“இந்தியா கூட்டணி எம்.பி-க்கள் மணிப்பூருக்கு சென்று ஆய்வு நடத்தியிருக்கிறார்கள். கலவரத்தை தடுக்க மத்திய, மாநில அரசுகள் என்ன செய்திருக்க வேண்டுமென்று நினைக்கிறீர்கள்?”

வன்முறை
“கிறிஸ்தவர்களான குக்கிகளை வெளிநாட்டவராக சித்தரிக்கிறார்கள். மெய்திக்கள் வைஷ்ணவர்களுடன் நெருக்கமாக இருக்கிறார்கள். மெய்திகளுக்கு ஆதரவாக முதல்வர் பிரேன் சிங் பேசுகிறார். எனவே பா.ஜ.க-வின் மத வகுப்பு வாத அரசியல்தான் மணிப்பூர் கலவரத்தை தீவிரப்படுத்தியிருக்கிறது. மத்திய அரசின் தீர்க்கமான தலையீடு இல்லாமல் வன்முறை தீராது. முதல்வர் பதவியில் இருந்து பிரேன் சிங்கை நீக்க வேண்டும். ராணுவத்தை இறக்கி வன்முறையை நிறுத்த வேண்டும்!”
“இந்தியா அணியில் பல்வேறு முரண்பாடுகளைக் கொண்ட கட்சிகள் ஒன்றிணைந்திருக்கிறீர்கள். தேர்தல் முடியும் வரையில், இந்த அணி உடையாமல் பாதுகாப்பதில் உங்களுக்கு இருக்கும் சவால்கள் என்ன?”

“இந்தியா கூட்டணியின் ஒற்றுமையை சிதைப்பதற்கான முயற்சியில் பா.ஜ.க ஏற்கெனவே இறங்கிவிட்டது. மத்திய விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் இந்த அணியைப் பிரிக்க கடைசி வரையில் முயல்வார்கள். ஏற்கெனவே, சிவசேனாவை பிளவுபடுத்தியவர்கள், இப்போது தேசியவாத காங்கிரஸை உடைப்பதிலும் ஓரளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
ஆனால், அதற்குப் பிறகு உத்தவ் தாக்கரே, சரத் பவார் ஆகியோருக்கு மக்கள் மத்தியில் அனுதாபங்கள் அதிகரித்துவருவதுடன், பா.ஜ.க மீதான கோபமும் அதிகரித்திருக்கிறது. எனவே, இந்தியா கூட்டணிக்கு எவ்வளவுக்கெவ்வளவு பா.ஜ.க குடைச்சல் கொடுக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு இந்த கூட்டணி மக்களின் ஆதரவைப் பெறும்.”
“விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துவதாக சொல்கிறீர்கள். ஆனால், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள் மீதுதானே நடவடிக்கை எடுக்கப்படுகிறது?”

“ஊழலில் ஈடுபட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று யாரும் சொல்லவில்லை. ஆனால், எதிர்க்கட்சியில் இருப்பவர்களை… குறிப்பாக பா.ஜ.க-வுக்கு எதிராக வீரியமாகச் செயல்படுபவர்களை மட்டும் குறிவைப்பதையே விமர்சிக்கிறோம். அமலாக்கத்துறையால் பதிவு செய்யப்பட்ட 5,500-க்கும் மேற்பட்ட வழக்குகளில், வெறும் 22 வழக்குகளில் மட்டுமே குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன.
அதிலும், 21 வழக்குகளிலேயே குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அதாவது பா.ஜ.க-வின் விசாரணை அமைப்புகளால் வேட்டையாடப்பட்டவர்களில் வெறும் 0.1 சதவிகிதத்துக்கும் குறைவானவர்களே நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என்பதை இது உறுதிப்படுத்துகிறது.”
“I.N.D.I.A அணியின் பிரதமர் வேட்பாளர்… உங்களுடைய சாய்ஸ் யார்?”

“இந்தியாவில் நடப்பது நாடாளுமன்றத் தேர்தல்தானே ஒழிய, அதிபர் தேர்தல் அல்ல. மக்கள் தங்கள் எம்.பி-க்களை தேர்ந்தெடுப்பார்கள். எந்தக் கட்சி அல்லது கூட்டணி பெரும்பான்மை பெறுகிறதோ, அந்தக் கூட்டணியின் எம்.பி-க்கள் கூடி பொருத்தமானவரை பிரதமராகத் தேர்ந்தெடுப்போம். 2004 தேர்தல் முடிவில் அப்படித்தான் பிரதமரைத் தேர்ந்தெடுத்தோம்!”
“இந்தியாவில் சுமார் 100 ஆண்டுகளாக இயங்கிவரும் கம்யூனிஸ்ட் கட்சி, கேரளாவைத் தவிர எங்குமே ஆட்சியில் இல்லை. ஏன் பெருவாரியான மக்களின் நம்பிக்கையை கம்யூனிஸ்ட்களால் பெற முடியவில்லை?”

“கம்யூனிஸ்டுகளின் பலத்தை இரண்டு அளவுகோல்களால் அளவிட வேண்டும். ஒன்று தேர்தல் வெற்றி. இதில் கம்யூனிஸ்டுகள் பின்னடைவைச் சந்தித்திருப்பதை ஒப்புக்கொள்கிறேன். பணபலத்தைப் பயன்படுத்துவதும், வகுப்புவாத உணர்வைத் தூண்டுவதும் தேர்தல் முடிவுகளை பாதிக்கும் முக்கியமான காரணியாக இருப்பதால், ஆளும் வர்க்கக் கட்சிகளுடன் ஒப்பிடும்போது கம்யூனிஸ்ட்கள் பலவீனமான நிலையில் உள்ளனர். மற்றொரு முக்கியமான அளவுகோல், சக்திவாய்ந்த மக்கள் போராட்டங்கள் மூலம் நாட்டை ஆள்வோரின் அஜண்டாமீது செல்வாக்கு செலுத்தும் திறன்.
இதன் அடிப்படையில் பார்த்தால், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகளின் போராட்டம், தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்வதற்கு எதிராக தொழிலாளர் வர்க்கத்தின் நாடு தழுவிய வேலைநிறுத்தங்கள், தேசிய சொத்துக்களை கொள்ளையடிப்பதற்கும், பொதுத்துறையை தனியார் மயமாக்குவதற்கும் எதிரான போராட்டங்கள், வேலைவாய்ப்புக்கான இளைஞர்களின் போராட்டங்கள், புதிய கல்விக் கொள்கை மற்றும் இந்தி திணிப்புக்கு எதிரான மாணவர்களின் போராட்டங்கள் போன்றவற்றில் எல்லாக் கட்சிகளையும்விட முன்னணியில் இருப்பது கம்யூனிஸ்ட்தான்.”
“தமிழ்நாடு உள்பட எதிர்க்கட்சிகள் ஆளுகிற மாநிலங்களில் ஆளுநர்களின் செயல்பாடுகள் கடும் விமர்சனத்துக்கு ஆளாகின்றன. உங்கள் கருத்து என்ன?”
“எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள ஆளுநர்களை, மாநில மக்களின் நலனுக்கு எதிராகவும், தனது அரசியல் நோக்கங்களை முன்னெடுத்துச் செல்லவுமே மத்திய பா.ஜ.க அரசு பயன்படுத்துகிறது. இதனால் அத்தகைய ஆளுநர்களை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகள் பல மாநிலங்களில் எழுந்திருக்கின்றன. இந்த சம்பவங்களைத் தொடர்ந்து, ஆளுநர் எனும் பதவியையே ஒழித்துக்கட்ட (Abolish) வேண்டும் எனும் விவாதமும் எழுந்திருக்கிறது. இதைத் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என்பதே என்னுடைய கருத்து!”
“மும்பையில் நடைபெறவிருக்கிற இந்தியா கூட்டணியின் 3-வது கூட்டத்தில் என்ன விவாதிக்கப்பட இருக்கிறது?”

“இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாப்பு, அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்தல், அமலாக்கத்துறை போன்ற மத்திய அமைப்புகளை பா.ஜ.க அரசு பயன்படுத்தும் விதம் ஆகியவை குறித்து மும்பை கூட்டத்தில் விவாதிக்கப்படும். விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், நலத்திட்டங்களுக்கான செலவுகள் குறைப்பு போன்ற வாழ்வாதாரப் பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கத் திட்டமிட்டுள்ளோம். மாநில அளவில் கூட்டணியில் முடிவெடுப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்வோம்.”
“ஆனால், மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிப்போம் என்று பிரதமர் மோடியும் பா.ஜ.க-வினரும் உறுதியாகச் சொல்கிறார்களே?”
“1998-ல் ஆட்சியைப் பிடித்த அடல் பிஹாரி வாஜ்பாயும், பா.ஜ.க-வும், இப்படித்தான் ‘2004-லும் நாங்களே வெற்றிபெறுவோம்’ என்றார்கள். ஆனால், நடந்தது என்ன… ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்று, டாக்டர் மன்மோகன் சிங் பிரதமரானார். அந்த UPA அரசாங்கம் பத்து ஆண்டுகள் தொடர்ந்தது. இப்போதும் அதுதான் நடக்கப் போகிறது.”
நன்றி
Publisher: www.vikatan.com
