சிக்கிம் மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள லாச்சன் பள்ளத்தாக்கில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மேகவெடிப்பு ஏற்பட்டது. இந்த மேகவெடிப்பால் குறுகிய நேரத்தில் அதீத கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாக்யாங், காங்டாக், நாம்சி, மங்கன் உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மங்கன் மாவட்டத்தின் சுங்தாங் நகரம் மிகவும் மோசமான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.
மங்கன், காங்டாக் மற்றும் நாம்சி ஆகிய மாவட்டங்களில் 11 பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. வீடுகள், குடிநீர் குழாய்கள், கழிவுநீர் பாதைகள் உள்ளிட்டவை வெள்ளத்தில் முழுமையாக சேதமடைந்தன. சிக்கிமில் மேகவெடிப்பு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். 26 பேர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 22 ராணுவ வீரர்கள் உள்பட 98 பேரின் கதி என்ன? என்பது இன்னும் தெரியவில்லை. இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. எனினும் மாயமானவர்களை தேடும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மழை, வெள்ளத்தால் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை சுமார் 2 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.
நன்றி
Publisher: 1newsnation.com
