"மோடி ஆட்சியில் கொல்லப்பட்ட, கைதுசெய்யப்பட்ட

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி, தங்களின் அடுத்தடுத்த கூட்டங்களை நடத்தி அடுத்தாண்டு லோக் சபா தேர்தலுக்கு முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. பீகாரில் நடந்த முதல் கூட்டத்தில் ஒன்றிணைத்த எதிர்க்கட்சிகள், பெங்களூருவில் நடந்த இரண்டாவது கூட்டத்தில் தங்களின் கூட்டணிக்கு `இந்தியா’ எனப் பெயர் வைத்தது. அதற்கடுத்ததாக மும்பையில் நடந்த மூன்றாவது கூட்டத்தில் கூட்டணியில் பல கமிட்டிகளை அமைத்தது. இதில் முதலில் எதிர்க்கட்சிகளின் `இந்தியா’ என்ற பெயரை எதிர்த்த பா.ஜ.க, நாட்டை `பாரதம்’ என்று அழைக்க ஆரம்பித்தது.

‘இந்தியா’ கூட்டணி

பின்னர் இதற்கு வலுவான எதிர்ப்புகள் வரவே, `சனாதனம்’ குறித்து திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை, ஒட்டுமொத்த இந்துக்களுக்கு எதிராக இந்தியா கூட்டணி செயல்படுகிறது எனப் பிரதமர் மோடி முதல் ஒட்டுமொத்த பா.ஜ.க-வும் கையிலெடுத்தனர்.

இந்நிலையில். இந்தியா கூட்டணி, ஜனநாயகத்தில் வெறுப்பை பரப்ப அனுமதிக்க மாட்டோம் எனக் கூறி 14 ஊடக நெறியாளர்களைப் புறக்கணிப்பதாக ஒரு பட்டியலை வெளியிட்டது. இதற்கு பாஜக தரப்பிலிருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின.

அதில் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, “இந்தியா கூட்டணி இரண்டு விஷயங்களை மட்டுமே செய்துவருகிறது. ஒன்று சனாதனத்தை அவமதிப்பது. மற்றொன்று தனிப்பட்ட பத்திரிகையாளர்களை அச்சுறுத்தும் வகையில் ஊடகங்களைத் தாக்குவது. அவர்களின் மத்தியில் எமர்ஜென்சி கால மனப்பான்மை இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது” என்று விமர்சித்திருந்தார்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா

இந்த நிலையில், நாட்டாவின் விமர்சனத்துக்குப் பதிலளிக்கும் விதமாக கர்நாடக முதல்வர் சித்தராமையா, “பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் ஒரு செய்தியாளர் சந்திப்பு கூட நடத்தவில்லை. நாட்டின் மொத்த பத்திரிகையாளர்களையும் அவர் புறக்கணித்திருக்கும் நிலையில், ஒரு கட்சியின் ஊதுகுழலாகச் செயல்பட்டு ஊடக நெறிமுறைகளைச் சமரசம் செய்த 14 ஊடகவியலாளர்களை தவிர்ப்பதை கேள்வி கேட்க உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது” என்று ட்விட்டரில் சாடியிருந்தார்.

மேலும் சித்தராமையா தனது ட்விட்டர் பதிவில், “ஊடகங்கள் மீதான உண்மையான தாக்குதல்களின் பட்டியலை நாங்கள் வழங்குகிறோம். இதையெல்லாம் நீங்கள் மறந்திருக்கலாம். ஆனால், நாங்கள் மறக்கவில்லை. பத்திரிகை சுதந்திரத்தில் இந்தியா, 2015-ல் 136-வது இடம், 2019-ல் 140-வது இடம், 2022-ல் 150-வது இடம், 2023-ல் 161-வது இடம். உண்மையைப் புகாரளித்த பத்திரிகையாளர்களான, சித்திக் கப்பன், முகமது சுபைர், அஜித் ஓஜா, ஜஸ்பால் சிங், சஜ்ஜத் குல் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.

மோடி ஆட்சியில் உண்மையின் குரலாக நின்ற பத்திரிகையாளர்களான ராகேஷ் சிங், சுபம் மணி திரிபாதி, ஜி மோசஸ், பராக் புயான், கவுரி லங்கேஷ் ஆகியோர் கொல்லப்பட்டனர். எனவே, ஒரு தரப்பினர் ஊடகங்களுக்கு வராததோ, விவாதத்தில் பங்கேற்காததோ கருத்து சுதந்திரத்தை மீறுவது இல்லை. மோடி பற்றிய பிபிசி ஆவணப்படத்தை தடை செய்ததுதான் கருத்து சுதந்திரத்தின் மீதான உண்மையான தாக்குதல்” என்று குறிப்பிட்டிருந்தார்.



Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *