கோவை மணியகராம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கோபிநாத் – சரண்யா தம்பதி. இவர்கள் கோவை மேயர் கல்பனா மற்றும் அவர் குடும்பத்தினர் குறித்து பல்வேறு புகார்களை முன்வைத்துள்ளனர். இது குறித்து சரண்யா பேசுகையில், “இந்த காம்பவுண்ட்டில் 4 வீடுகள் உள்ளன. எங்கள் வீட்டுக்கு எதிரில் மேயர் கல்பனாவின் அம்மா காளியம்மாள், தம்பி குமார் குடியுள்ளனர். தொடக்கத்தில் மேயர் குடும்பத்தினர் நன்றாகத்தான் பேசிக் கொண்டிருந்தனர்.

கல்பனா மேயராவதற்கு முன்பு ஒருமுறை அவரின் அம்மா காளியம்மாவுக்கு உடல்நலம் சரியில்லை என்று ரூ.15,000 கடன் வாங்கினர். அதில் ரூ.5,000 மட்டும் திருப்பிக் கொடுத்தனர். மேயரான பிறகு மீதிப்பணத்தைத் திருப்பிக் கேட்டதற்கு மேயரின் தம்பி குமார், எங்களை ஒருமையில் பேசி மிரட்டினார்.
தொடர்ந்து 4 வீடுகளுக்கும் பொதுவான கேட்டை அடைப்பது, காரை நிறுத்தக் கூடாது என்று பல்வேறு தொந்தரவுகளைக் கொடுத்தனர். இந்த நிலையில் மேயர் கல்பனா கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆர்.எஸ்.புரம் அரசு இல்லத்திலிருந்து பொருள்களை எடுத்துக் கொண்டு குடும்பத்துடன் இங்கு வந்துவிட்டார். தினமும் அவரைச் சந்திக்க பல வி.ஐ.பி-க்கள் வருவார்கள். அவர்கள் ரகசியம் கசிந்துவிடக் கூடாது என்பதற்காக, எங்களுக்கு தொந்தரவு தருகின்றனர்.



என் தந்தை மதியழகன் தி.மு.க தொண்டர். கலைஞரின் சொந்த மாவட்டமான திருவாரூரைச் சேர்ந்தவர். கட்சிக்கு எந்தப் பிரச்னையும் வந்துவிடக் கூடாது என்பதற்காக இந்தப் பிரச்னையை வெளியில் சொல்லாமல் இருந்தோம். ஆனால் தொடர்ந்து தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருந்தனர். தினசரி எங்கள் வீட்டின் முன்பு துடைப்பம், மந்திரித்த எலுமிச்சை, பூசணிக்காய் வைப்பார்கள்.
பக்கத்துக்கு வீட்டு மொட்டை மாடியில் ஏறி எங்கள் வீட்டின் அருகே கெட்டுப்போன உணவுகள், பயன்படுத்திய நாப்கின் கொட்டினார்கள். பக்கெட்டில் சிறுநீரைப் பிடித்து, அதையும் எங்கள் வீட்டின்மீது ஊற்றினார்கள். வீட்டுக்குள் அமரவே முடியாது. நிம்மதியாக சாப்பிடவோ, தூங்கவோ முடியாது. இந்த சுகாதார சீர்கேட்டால் ஏற்கெனவே ஆஸ்துமா பிரச்னை உள்ள என் அம்மாவுக்கு சுவாசப் பிரச்னை ஏற்பட்டு சிகிச்சை எடுத்துள்ளோம். ஜன்னல், கதவுகளை எல்லாம் அடைத்துள்ளோம்.


வெளிக்காற்றை சுவாசித்து பல மாதங்கள் ஆகிறது. நள்ளிரவு பைக், காரில் வேண்டுமென்றே நீண்ட நேரம் ஹார்ன் அடிப்பார்கள். தட்டிக் கேட்டால் தகாத வார்த்தைகளில் திட்டுகின்றனர். எங்களது பாதுகாப்புக்காக இது தொடர்பான வீடியோ, ஆடியோக்களைப் பதிவுசெய்துள்ளோம். இது குறித்து முதல்வரின் தனிப்பிரிவு, மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளோம்” என்றார்.
இது குறித்து விளக்கம் கேட்க மேயர் கல்பனாவை பலமுறை தொடர்பு கொண்டும், பதிலளிக்கவில்லை. அவரின் தம்பி குமாரை தொடர்பு கொண்டபோது, “வெளியில் இருக்கிறேன்” என இணைப்பைத் துண்டித்து விட்டார்.

கல்பனாவின் கணவர் ஆனந்தகுமாரோ, “இது பொய்யான புகார். இதை சட்டரீதியாக அணுக உள்ளோம்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com