மும்பையில் உள்ள ரிசர்வ் பேங்க்கிற்கு இன்று இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில் ரிசர்வ் வங்கியின் தலைவர் சக்தி காந்தா தாஸ், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் ராஜினாமா செய்யவேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது.

மேலும் மும்பை போர்ட் பகுதியில் இருக்கும் ரிசர்வ் வங்கி, பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸில் இருக்கும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, சர்ச் கேட்டில் இருக்கும் ஹெச்.டி.எஃப்.சி வங்கி உட்பட 11 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்றும், ரிசர்வ் வங்கியின் தலைவர் சக்தி காந்தா தாஸ், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் இந்தியாவில் மிகப்பெரிய ஊழலில் ஈடுபட்டுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இது தவிர, `சில உயர் வங்கி அதிகாரிகள் மற்றும் முக்கிய அமைச்சர்கள் ஊழலில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு எங்களிடம் ஆதாரம் இருக்கிறது. எனவே ரிசர்வ் வங்கி தலைவரும், நிதியமைச்சரும் உடனே தங்களது பதவியை ராஜினாமா செய்யவேண்டும். ஊழலில் ஈடுபட்ட அனைவரும் தண்டிக்கப்படவேண்டும். அப்படி தண்டிக்கப்படவில்லையெனில் வெடிகுண்டு வெடிக்கும்.

11 வெடிகுண்டுகளும் ஒவ்வொன்றாக வெடிக்கும்’ என்று அந்த இ-மெயிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கியின் தலைமை காவலர் ஹரிச்சந்திர பவார் எம்.ஆர்.ஏ மார்க் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் இ-மெயிலில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் சோதனை நடத்தினர்.
ஆனால் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் இந்த வெடிகுண்டு மிரட்டலை விடுத்தது யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஏற்கெனவே மும்பையில் வசிக்கும் தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு பல முறை கொலை மிரட்டல் வந்துள்ளது. மும்பையில் போலீஸார் புத்தாண்டையொட்டி எந்தவித அசம்பாவித சம்பவமும் நடக்காமல் இருக்க, 144 தடை உத்தரவு பிறப்பித்திருக்கின்றனர்.
நன்றி
Publisher: www.vikatan.com