ராமநாதபுரம் வண்டிக்காரத் தெருவிலுள்ள வெளிப்பட்டணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பொறுப்பு சார்பதிவாளராக பரமக்குடியை சேர்ந்த பெத்துலெட்சுமி பணியாற்றி வருகிறார். மாவட்டத்திலேயே அதிக விலை மதிப்புள்ள சொத்துகள் இந்த அலுவலகத்தில்தான் அதிகம் பதிவு செய்யப்படுவதால் லஞ்சத்துக்கு இங்கு பஞ்சம் இல்லை என்கிறார்கள் விவரம் அறிந்த சிலர். அந்தளவுக்கு லட்சக்கணக்கில் லஞ்சம் கேட்கப்படுவதாக இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தார்கள்.

இங்கு பொறுப்பு சார்பதிவாளராக பணியாற்றி வந்த பெத்துலெட்சுமி மீதும் ஏகப்பட்ட புகார் எழுந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 18,19 தேதிகளில் அதிகமான பத்திரப்பதிவு நடந்தது. இதற்காக கூடுதல் டோக்கன் அளிக்கவும் பதிவுத்துறை உத்தரவிட்டிருந்தது.
அப்போது பதிவு செய்ய வந்த ஆவணங்களை ஆய்வு செய்யாமல் விரைந்து ஒப்புதல் கொடுக்க பெத்துலெட்சுமி ஆவண எழுத்தர்கள், இடைத்தரகர்கள் மூலம் ஏற்கனவே லஞ்சப்பணத்தை வாங்க சொல்லி அந்த அடிப்படையில் பத்திப்பதிவை நடத்தியிருக்கிறார் என்ற தகவல் பரவியது. இது குறித்த தகவல்களை சிலர் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு தெரிவித்துள்ளனர்.

அவரை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சப்பணத்துடன் பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீஸ் திட்டமிட்டு காத்திருந்தபோது, அவர் லஞ்சம் வாங்கவில்லை என்பதால், மீண்டும் அவரைப்பற்றி விசாரித்துள்ளனர். அப்போது தான், `ஆபத்து என்பதால் அலுவலகத்தில் அவர் லஞ்சம் வாங்குகுவதில்லை, வேலை முடித்து பரமக்குடிக்கு கிளம்பும்போது பஸ் ஸ்டாண்டில் வைத்து தன்னுடைய இடைத்தரகர்களிடம் லஞ்ச பணத்தை பெற்றுச் செல்கிறார்’ என்ற தகவல் கிடைக்க, கடந்த 19-ம் தேதி மாலை பேருந்து நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் மறைந்து நின்றனர்.
அப்போது அங்கு வந்த சார்பதிவாளர் பெத்துலெட்சுமியிடம் சிலர் பணத்தை கொடுக்க, உடனே கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் டி.எஸ்.பி ராமச்சந்திரன் தலைமையில் அவரை பிடித்து அவரிடமிருந்த ரூ 1,84,000-த்தை கைப்பற்றினர். இதை சற்றும் எதிர்பார்க்காத சார்பதிவாளர் பெத்துலெட்சுமி அதிர்ச்சி அடைய அவரை அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அதைத்தொடர்ந்து அவரை பரமக்குடியிலுள்ள வீட்டுக்கு அழைத்து சென்று சோதனை நடத்தியதில் அங்கு கணக்கில் வராத ரொக்கப்பணம் 12 லட்சத்தையும், பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
எப்போதுமே அலுவலகத்தில் யாரிடமும் பணம் வாங்காமல் நேர்மையானவர்போல் காட்டிக்கொண்ட பெத்துலெட்சுமி, வேலை முடிந்து ஊருக்கு செல்லும்போது தன்னுடைய இடைத்தரகர்கள் மூலம் பஸ் ஸ்டாண்டில் வைத்து லஞ்சப்பணத்தை பெற்றுச்செல்வதை வழக்கமாக வைத்திருந்து உஷார் பார்ட்டியாக இருந்திருக்கிறார். இப்போது இவரைத் தொடர்ந்து ராமநாதபுரம் பத்திரப்பதிவுத்துறையில் இன்னும் சில லஞ்ச அலுவலர்கள் சிக்குவார்கள் என்று சொல்லப்படுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
