காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பாரத் ஜோடோ யாத்திரையின் இரண்டாம் கட்டத்தை, `பாரத் ஜோடோ நியாய யாத்திரை’யாக நடத்தி வருகிறார். அவர் யாத்திரையை மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கினார். தற்போது அஸ்ஸாமில் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். ஆனால் அஸ்ஸாமில் யாத்திரை தொடங்கியதிலிருந்து ராகுல் காந்திக்கு பல்வேறு தரப்பிலிருந்து இடையூறுகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆங்காங்கே ராகுல் காந்தி யாத்திரைக்குள் பா.ஜ.க-வினர் கொடியுடன் வந்து, குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். இதனால் இரு தரப்பினரிடையே ஆங்காங்கே மோதல் வெடித்துள்ளது. ராகுல் காந்தி நேற்று கவுகாத்திக்கு வந்தபோது, அவர் நகருக்குள் நுழைவதற்கு மாநில அரசு தடை விதித்தது. இதையடுத்து ராகுல் காந்தி தலைமையில் வந்த காங்கிரஸ் கட்சியினர், தடுப்பை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர்.

இதனால் போலீஸாருக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதையடுத்து ராகுல் காந்தி மீது கிரிமினல் வழக்கு பதிவுசெய்யும்படி, மாநில போலீஸாருக்கு மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உத்தரவிட்டார். அதனடிப்படையில் வழக்கும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ராகுல் காந்தி கோயிலுக்கு செல்வதற்குக்கூட ஹிமந்தா பிஸ்வா சர்மா அரசு அனுமதி கொடுக்க மறுத்துவிட்டது. குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல ராகுல் காந்தி திட்டமிட்டால், அதற்கு போலீஸார் மற்றும் மாநில அரசு அனுமதி கொடுப்பது கிடையாது.
இதனால் ராகுல் காந்தி யாத்திரையை திட்டமிட்ட வழித்தடத்தில்கூட நடத்த முடியாத நிலையில் இருக்கிறார். நாளை வரை அஸ்ஸாமில் யாத்திரை இருக்கும். யாத்திரையின் 7-வது நாளான இன்று, அஸ்ஸாமின் பார்பெடா மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு ராகுல் காந்தி உரையாற்றினார். இதில் பேசிய ராகுல் காந்தி, “ஹிமந்தா பிஸ்வா சர்மா நில ஊழல் உட்பட பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டுள்ளார்.

நாட்டிலேயே மிகவும் மோசமான ஊழல்வாதி இவர்தான். என்மீது வழக்கு தொடர்ந்து என்னை மிரட்டலாம் என்று அவருக்கு யார் ஆலோசனை கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. என்மீது இன்னும் 25 வழக்குகள் பதிவுசெய்யுங்கள். என்னை பயமுறுத்த முடியாது. ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க-வால் என்னை பயமுறுத்த முடியாது.
அஸ்ஸாமின் வரலாறு, கலாசாரம், மொழியை அழிக்க பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ் விரும்புகிறது. அவர்கள் நாக்பூரில் இருந்து கொண்டு அஸ்ஸாமை ஆட்சி செய்ய நினைக்கிறார்கள். நாங்கள் அதற்கு அனுமதிக்கமாட்டோம். பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரின் இதயத்தில் வன்மம் நிறைந்திருக்கிறது” என்று குறிப்பிட்டார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய அமைச்சர் அமித் ஷாவிற்கு எழுதியிருக்கும் கடிதத்தில், “ராகுல் காந்தியின் யாத்திரைக்கு தகுந்த பாதுகாப்பு கொடுங்கள்” என்று கேட்டுக்கொண்டுள்ளார். யாத்திரையில் அஸ்ஸாம் போலீஸார் ராகுல் காந்தி அருகில் பா.ஜ.க தொண்டர்கள் செல்ல அனுமதிக்கின்றனர். இதனால் ராகுல் காந்தியின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது என காங்கிரஸ் கட்சியினர் அச்சம் தெரிவிக்கின்றனர். யாத்திரையில் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட யாரும் கைதுசெய்யப்படவில்லை என்றும் கார்கே தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
யார் இந்த ஹிமந்தா பிஸ்வா சர்மா?
அடிப்படையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரான ஹிமந்தா பிஸ்வா சர்மா, 2001-ம் ஆண்டு முதன்முறையாக காங்கிரஸ் கட்சி சார்பாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் முதல்வர் தருண் கோகாயுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 2015-ம் ஆண்டு பா.ஜ.க-வில் இணைந்தார். 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, ஹிமந்தா பிஸ்வா சர்மா ஏற்கெனவே இருந்த முதல்வரை ஓரங்கட்டிவிட்டு, புதிய முதல்வரானார். காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது ஹிமந்தா பிஸ்வா சர்மா முதல்வராக, ராகுல் காந்தி அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் அவர் கட்சியை விட்டு வெளியேறி பா.ஜ.க.வில் சேர்ந்தார்.

அதோடு காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய பிறகு, ராகுல் காந்திக்கு எதிராக அடிக்கடி கடுமையான விமர்சனங்களை ஹிமந்தா பிஸ்வா சர்மா முன்வைத்து வருகிறார். “நாட்டிலேயே ராகுல் காந்தியின் குடும்பம்தான் அதிகப்படியான ஊழலில் ஈடுபட்டுள்ளது” என்று ஹிமந்தா பிஸ்வா சர்மா குற்றம்சாட்டியிருந்தார். ராகுல் காந்தியும் அஸ்ஸாம் யாத்திரையில் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் அவரது பிள்ளைகளும் ஊழலில் ஈடுபட்டுள்ளனர் என்று தொடர்ந்து கூறி வருகிறார். எனவேதான் அஸ்ஸாமில் ராகுல் காந்தி யாத்திரைக்கு எதிராக ஹிமந்தா பிஸ்வா சர்மா தடைகளை ஏற்படுத்தி வருகிறார் என்கின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY
நன்றி
Publisher: www.vikatan.com
