காங்கிரஸ் கட்சியானது, 2024 தேர்தலுக்கு முன்பாக அரையிறுதி ஆட்டமாக இந்த மாதம் நடைபெறும் ஐந்து மாநில தேர்தலில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக, ஒன்றுபட்ட ஆந்திராவில் ஆட்சியிலிருந்துவிட்டு, மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு நடந்த இரண்டு சட்டமன்றத் தேர்தல்களிலும் தோல்வியடைந்ததால், இந்த முறை தெலங்கானாவில் ஆட்சியைப் பிடித்தாக வேண்டும் என்ற முனைப்பில் தனித்துக் களமிறங்கியிருக்கிறது காங்கிரஸ்.

அதன் ஒருபகுதியாக தெலங்கானாவில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, முதல்வர் சந்திரசேகர ராவையும், ஒவைசியையும் பா.ஜ.க-வின் `பி’ டீம் எனத் தொடர்ச்சியாகக் கூறிவருகிறார். மேலும், ஒவைசி பா.ஜ.க-விடமிருந்து பணம் வாங்கிக்கொண்டு, பா.ஜ.க எங்கெல்லாம் போட்டியிடுகிறதோ அங்கெல்லாம் தனது கட்சி வேட்பாளர்களை எதிர்க்கட்சிகளின் வாக்குகளை பிரிக்க நிறுத்துகிறார் என ராகுல் காந்தி சாடியிருந்தார்.
இந்த நிலையில், தனது மத அடையாளத்தின் மீதான வெறுப்பால்தான் ராகுல் காந்தி இவ்வாறு சாடுகிறார் என ஒவைசி பதிலுக்குச் சாடியிருக்கிறார்.
ஹைதராபாத் அருகே சங்கரெட்டியில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தியை விமர்சித்த ஒவைசி, “2014 மற்றும் 2019 தேர்தலில் தோல்வியடைவதற்காக பா.ஜ.க-விடம் நீங்கள் (ராகுல் காந்தி) பணம் வாங்கினீர்களா… என்னுடைய பெயர் அசாதுதீன் ஒவைசி என்பதாலும், நான் தாடி வைத்துக்கொண்டு தலையில் தொப்பி அணிந்திருப்பதாலும்தான் நான் பணம் வாங்கியதாக என் மீது நீங்கள் குற்றம்சாட்டுகிறீர்கள்.

உங்களின் நண்பர் ஜோதிராதித்யா சிந்தியா பா.ஜ.க-வில் இணைந்தார். ஆனால், அவர் பா.ஜ.க-விடம் பணம் வாங்கினார் என்று நீங்கள் கூறவில்லை. உங்களின் மற்றொரு நண்பர் ஜிதின் பிரசாதாவும் பா.ஜ.க-வில் இணைந்தார். அப்போதும், பா.ஜ.க-விடம் அவர் பணம் வாங்கினார் என்று நீங்கள் கூறவில்லை. எனவே, என்னுடைய பெயர், தாடி, நான் அணிந்திருக்கும் தொப்பி ஆகியவற்றின் மீதான உங்களின் வெறுப்புதான் இது. அதனால்தான் இப்படிப் பேசுகிறீர்கள்” என்றார்.
தெலங்கானாவில் நவம்பர் 30-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com