புதுச்சேரியில் இன்று தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நம் நாட்டின் முயற்சியில் உருவாக்கப்பட்ட விண்கலம் மேலே எழும்போது, சொல்லி வைத்தாற்போல அனைவரும் ’வந்தே மாதரம்’ என்று கூறியதாக அப்துல் கலாம் அவர்கள் தனது சுயசரிதையில் எழுதியிருக்கிறார். யாருடைய தூண்டுதலும் இன்றி தலைமை விஞ்ஞானி முதல் சாதாரண ஊழியர்கள் வரை வந்தே மாதரம் என்று உச்சரித்திருக்கிறார்கள்.

அதேபோல ஒரு வீரரைப் பற்றி அல்ல, வெற்றி என்று வரும்போது உள்ளுணர்வோடு என்ன சொல்ல வேண்டுமோ அதை அவர்கள் சொல்கிறார்கள். `ஜெய் ஸ்ரீராம்’ என்பது நாட்டின் வெற்றியைக் குறிக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்தனர். அதில் மதம் இருந்ததாக நான் பார்க்கவில்லை. அதில் வெற்றி உணர்வு இருந்ததாகவே நான் பார்க்கிறேன். அந்த நாமம் வாழ்க, இந்த நாமம் வாழ்க என்று சில இடங்களில் நாம் சொல்கிறோம். மற்றவர்கள் இருக்கும்போதும் சொல்கிறோம்.
அதன்படி நம் நாடு வெற்றி பெற்றது என்பது தொடர்பாக சொல்லகூடிய விதமாகத்தான் பார்க்கிறேன். வெற்றியைக் குறிப்பதற்கு மற்ற மதத்தவர்கள் அந்த வார்த்தையைப் பயன்படுத்தினால் நான் தவறு என்று சொல்ல மாட்டேன். இதை மதம் சார்ந்ததாகப் பார்க்கவில்லை, வெற்றி மற்றும் மன உணர்வு சார்ந்ததாகத்தான் நான் பார்க்கிறேன். தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் போராட்டம் நடத்துகிறார்கள். அவர்களை நான் சந்தித்து அவர்களிடம் புரிய வைப்பேன்.

போராட்டம் நடத்தும் அளவுக்கு எதுவும் இல்லை. வகுப்பறையில் இருந்து உலக அளவில் நான் மாணவர்களைக் கொண்டு செல்வேன் என பிரதமர் கூறியிருக்கிறார். பல பேரிடம் கருத்து கேட்டுத்தான் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்திருக்கிறது. புரிதல் இல்லாமல் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். யாரும் தமிழுக்கு எதிரானவர்கள் இல்லை. தாய் மொழியை ஊக்கப்படுத்துவதுதான் புதிய கல்விக்கொள்கை” என்றார்.
நன்றி
Publisher: www.vikatan.com
