அது மட்டுமல்லாமல் மாட்டுத் தீவனம் வாங்குவதற்கு அரசு இந்த ஆண்டு ஒதுக்கிய தொகை, ரூ.20 கோடி. அதற்கான டெண்டர் விடப்பட்டபோது, முதல் முறை யாரும் கலந்து கொள்ளவில்லை. அதனால் தனியாரிடம் ஒப்படைப்பதற்காக நடவடிக்கை எடுத்தார்கள். அப்போது அந்த துறையின் செயலாளராக இருந்த குமார் ஐ.ஏ.எஸ் அவர்கள், `இந்தப் பணியை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது. டெண்டர் மூலமாகத்தான் கொடுக்க வேண்டும்” என்று சொன்னதால், அந்த கோப்பு நிற்கிறது. இல்லையென்றால் அதில் மிகப்பெரிய தொகையை இவர்கள் கமிஷன் அடித்திருப்பார்கள். அதேபோல மாணவர்களுக்கான லேப்டாப்பில் ரூ.8,000 பேரம் பேசி, தனியார் கம்பெனியில் இருந்து வாங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனால் குளோபல் டெண்டர் மூலமாகவே லேப்டாப் கொள்முதல் செய்ய வேண்டும் என்று, தலைமைச் செயலாளர் கூறிவிட்டதால், அதுவும் கிடப்பில் இருக்கிறது. இப்படி தனியாரிடம் பேரம் பேசி, லஞ்சம் பெற்று, தரமற்ற பொருள்களை வாங்கி மக்களை ஏமாற்றுகிறார்கள். அதேபோல காவல்துறையிலும் ஊழல் பகிரங்கமாக நடக்கிறது.
உழவர்கரை தொகுதியில் இருக்கும் ஒருவர், தற்போது ஜெயா நகரில் இரண்டு அடுக்கு கட்டடத்தைக் கட்டி வருகிறார். அவரிடம் சென்று பணத்தைக் கொடுத்தால், சட்டம் ஒழுங்குப் பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள் மாற்றப்படுவார்கள். அதற்கும் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ-க்கென்று தொகை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

அந்த தொகை எங்கு செல்கிறது என்றும் உங்களுக்குத் தெரியும். இப்படி முதலமைச்சர் துறை தொடங்கி அனைத்து துறைகளிலும், ஊழலைத் தவிர வேறு எதுவும் நடைபெறவில்லை. அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை என்று, அவர்கள்மீது பழியைப் போட்டு முதலமைச்சர் தப்பிக்க நினைக்கிறார். பினாமிகள் பெயரிலும், தங்கள் மனைவிகளின் பெயரிலும் இந்த அமைச்சர்கள் சொத்துகளை வாங்கிக் குவித்து வருகிறார்கள். முதலமைச்சர் தன்னுடைய தொகுதியில் 10 கோடி ரூபாயில் திருமண மண்டபத்தைக் கட்டி வருகிறார். எங்கிருந்து அதற்கான நிதி வந்தது… அவர் என்ன தொழில் செய்தார்… பல அமைச்சர்கள் சொத்துகளை வாங்கிய விவரங்கள் எங்களிடம் வந்திருக்கின்றன. ஒட்டுமொத்தமாக இந்த ஆட்சி புதுச்சேரி மக்களை சுரண்டுகிற ஆட்சி என்பது நிரூபணமாகியிருக்கிறது” என்றார்.
நன்றி
Publisher: www.vikatan.com
