ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் 99-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு புதுச்சேரி வீராம்பட்டினத்தில் அணிவகுப்பும், அரியாங்குப்பத்தில் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. அந்த அணிவகுப்பில் அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணகுமார், எம்.எல்.ஏ-க்கள் சிவசங்கரன், கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் ஆர்.எஸ்.எஸ் சீருடையுடன் கலந்துகொண்டதும், புதுச்சேரியின் சபாநாயகர் செல்வம் பொதுக்கூட்டத்தில் முன் வரிசையில் அமர்ந்திருந்ததும் விவாதப் பொருளாகியிருக்கிறது.

இந்த நிலையில் புதுச்சேரி அரசின் எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க எம்.எல்.ஏ-வுமான சிவா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்தியாவில் சமூக நல்லிணக்கத்தையும், சமத்துவத்தையும் சிதைக்கப் பாடுபடும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும், மாண்பிற்குரிய சபாநாயகரும் கலந்துகொண்டது மரபுகளை மீறும் செயலாகும்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் 99-வது ஆண்டு தொடக்க நாளையொட்டி, இவர்களின் சித்தாந்தங்களுக்கு எதிரான சமத்துவத்தையும், சமூக நல்லிணக்கத்தையும் போதித்த காந்தியடிகள், வள்ளலார், அண்ணல் அம்பேத்கார் ஆகியோரின் பெயரில் புதுச்சேரி மாநில ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தியிருப்பது, முழுக்க முழுக்க மக்களை ஏமாற்றும் செயல்.
2022-ம் ஆண்டு தமிழ்நாட்டில் அனுமதி மறுக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பை, ஆட்சி அதிகார பலத்தினால் அனைத்து மத மக்களுடன் ஒற்றுமையாக வாழும் புதுச்சேரி மண்ணில் நடத்தி, மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வினை ஊட்டியிருக்கின்றனர். புதுவை மக்களின் கலாசாரத்துக்கும், பன்முகத்தன்மைக்கும் துளியும் ஒவ்வாத ஓர் ஊர்வலத்தை, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில், ராஜ்ய சபா எம்.பி செல்வகணபதி கொடியசைத்து தொடங்கி வைத்திருக்கிறார்.
அந்த ஊர்வலத்தில் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்களுடன், அமைச்சர் சாய் சரவணக்குமார் கலந்துகொண்டிருப்பதும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும். அனைத்துக்கும் மேலாக புதுச்சேரி சட்டமன்றத்தின் மாண்புகளையும், மரபுகளையும் பாதுகாக்க வேண்டிய சபாநாயகரே இந்த ஆர்.எஸ்.எஸ் பொதுக்கூட்டத்தில், முன் வரிசையில் அமர்ந்து கலந்துகொண்டிருப்பது ஜனநாயக நெறிமுறைகளுக்கே எதிரானதாகும். இதனை முதலமைச்சர் ரங்கசாமி கருத்தில்கொண்டு இனிவரும் காலங்களில் இது போன்ற ஆர்.எஸ்.எஸ் ஊர்வலங்களுக்குத் தடை விதிக்க வேண்டும். மக்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது, சட்டம் – ஒழுங்கில் பிரச்னை ஏற்பட்டுவிடக் கூடாது,

பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் எங்கள் இந்தியா கூட்டணி கவனமாகச் செயல்படுகிறது. ஆனால், வேண்டுமென்றே பிரச்னைகளை புதுச்சேரியில் உருவாக்க ஆர்.எஸ்.எஸ் முயல்கிறது. இவர்களின் பிரிவினைவாத கனவுகள் ஒருபோதும் நிறைவேறாது. அமைதிப் பூங்காவாகத் திகழும் புதுச்சேரி மாநிலத்தில் மகாத்மா காந்தியின் கொள்கைக்கும், கோட்பாடுகளுக்கும் சம்பந்தம் இல்லாதவர்கள் அவரை முன்னிறுத்தி அரசியல் செய்து, கலவரத்தை ஏற்படுத்த நினைக்கும் பா.ஜ.க-வின் மதவாத கொள்கைகளையும், முகமூடிகளையும் மக்கள் உற்று நோக்கி வருகிறார்கள். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதற்கான பதிலை மக்கள் நிச்சயம் சொல்வார்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
நன்றி
Publisher: www.vikatan.com
