புதுச்சேரி அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன் தலைமைக் கழகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புதுச்சேரி அரசின் பத்திரப்பதிவுத் துறையில் போலி பத்திரம் பதிவு செய்தல், உயில்கள் திருத்தங்கள், விளை நிலங்களை அனுமதியின்றி குழி கணக்குகளாக பத்திரங்கள் பதிவு செய்தல் போன்ற பல்வேறு முறைகேடுகளில், பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக அ.தி.மு.க சார்பில் ஏற்கெனவே குற்றம்சாட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி அவர்களும், குறிப்பிட்ட சில பிரச்னைகளைக் கையில் எடுத்துக்கொண்டு முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரிவித்திருந்தார். அது தொடர்பாக அரசு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டதாக தெரிகிறது. இந்த சி.பி.சி.ஐ.டி விசாரணையை அவர்களால் ஒரு கட்டத்திற்கு மேல் கொண்டு செல்ல முடியாது. அதிகார வர்க்கத்தினர் எந்தவிதமான அச்சமும் இன்றி, சட்டத்துக்கு விரோதமாக சில பத்திரப்பதிவுகளை செய்து கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளை அடிக்கின்றனர்.
அவர்கள் தங்களது பெயர் மற்றும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயரில் பதிவுசெய்கின்றனர். குறிப்பாக புதுச்சேரி, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சொத்துகளை வாங்கிக் குவிக்கின்றனர். இது கடந்த தி.மு.க, காங்கிரஸ் ஆட்சியில் இருந்து தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் முதலமைச்சர் ரங்கசாமி சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அதேபோல மத்திய அமலாக்கத்துறையும் இதன் மீது விசாரணை நடத்தி, தவறு செய்து குறுக்கு வழியில் அளவுக்கு மீறி சொத்து சேர்த்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறுக்கு வழியில் சொத்துகள் சேர்த்திருந்தால் அதனை பறிமுதல் செய்ய வேண்டும். புதுச்சேரியில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவிகிதம் உள் இட ஒதுக்கீட்டை அரசு கடைசி நேரத்தில் அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதனால் 10 சதவிகிதம் உள் இட ஒதுக்கீடு அறிவிக்கப்படாத காலத்தில் வெளியிடப்பட்ட மெரிட் லிஸ்டில் இருந்த ஒரு சில மாணவர்களுக்கு, மருத்துவக் கல்வி வாய்ப்பு கிடைக்காத சூழல் ஏற்பட்டிருக்கிறது.
நன்றி
Publisher: www.vikatan.com
