இந்த நிலையில்தான், வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.75 கோடி சொத்துச் சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி, அவரின் மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு மூன்று ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் எட்டாவது பிரிவு 8(1) ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி அமைச்சர் பொன்முடி தனது பதவியை இழக்கிறார்.
அமைச்சர் பொன்முடியின் எதிர்காலம் இனி என்னவாகும் என்ற கேள்வியோடு திமுக சீனியர் ஒருவரிடம் பேசினோம்.
“தலைவர் கலைஞருக்கு ஒரு பேராசிரியர் அன்பழகன்போல, தளபதி ஸ்டாலினுக்கு பேராசிரியர் பொன்முடிதான். அரசியலைத் தாண்டி தலைவருக்கும் பொன்முடிக்கும் குடும்ப அளவில் மிக நெருக்கம். அதேபோல, அழகிரியிடம் நட்பு பாராட்டினார் பொன்முடி. தற்போது பொன்முடிக்கு ஏற்பட்டிருக்கும் இந்தச் சூழ்நிலை அரசியல்ரீதியாக மிகப்பெரிய பின்னவடைவுதான்.
தி.மு.க-வில் பல அமைச்சர்கள்மீது சொத்துக்குவிப்பு வழக்கு இருக்கிறது. ஆனால், பொன்முடி ஏற்பட்டு இருக்கும் பிரச்னைக்கு அவரே முதல் காரணமாகி விட்டார். ஏனென்றால், தான் செய்வதுதான் சரிஎன்று மனநிலை கொண்டவர் பொன்முடி. மறைந்த முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் சிக்கியிருந்தபோது, அவரை ‘வாய்தா ராணி’ என்று நக்கல் செய்தார் பொன்முடி. அவரை பொறுத்தவரை கட்சிக்கும் தலைமைக்கும் எதிரி என்றால், தனக்கும் அவர்கள் எதிரிதான் என்று எண்ணக்கூடியவர். கலைஞர், தளபதி, சின்னவர் வரை அவரின் நெருக்கம் தொடர்ந்தது. அதேநேரத்தில் தலைமை, சீனியர்களை தாண்டி யாரிடம் நெருக்கமாக பேசக்கூட மாட்டார்.

இதன் தாக்கமே, பொன்முடியின்மீது ஜெயலலிதாவின் கோப பார்வை விழுந்தது. அதனால்தான், பிற வழக்கை காட்டிலும் பொன்முடி மீதான வழக்கில் மிக தீவிரமாக இருந்தார். அப்போதும்கூட தலைமையின் சொல்கேட்டு அவர் நடக்கவே இல்லை. ஆடிட்டுக்கும் முறையாக ஒத்துழைக்கவில்லை. இருப்பினும், விழுப்புரம் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. ஆனால், சி.வி.சண்முகம், சட்டத்துறை அமைச்சராக இருந்தபோதுதான், இந்த வழக்கை துரிதப்படுத்தினார். பொன்முடிக்கு எதிரான பல ஆதாரங்களை அவரே நேரடியாக களத்தில் இறங்கி சேகரித்தார். அதுதான் தற்போது பெரும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. பொன்முடி கொஞ்சம் பொறுமையாக இருந்திருந்தால் பிரச்னை இவ்வளவு தீவிரமாக ஆகி இருக்காது. தற்போது அவர் குற்றவாளி என்று தீர்ப்பு வந்ததைக்கூட விழுப்புரம் திமுகவினரே ரசிக்கதான் செய்கிறார்கள். பக்கத்து மாவட்ட தலைகளும் குஷியில் ஆரவாரம் செய்கிறார்கள்.
நன்றி
Publisher: www.vikatan.com
