தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18-ம் தேதிகளில் பெய்த அதி கனமழை காரணமாக, பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கயத்தாறு, கடம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் குளம் வேகமாக நிரம்பியது. இதனால் குளத்தின் 24 கண் மதகு திறக்கப்பட்டது. இந்த நிலையில், கோரம்பள்ளம் குளத்தின் கரையில் திடீரென ஏற்பட்ட உடைப்பு காரணமாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியான கோரம்பள்ளம் பகுதி மற்றும் மாநகருக்குள் வெள்ளம் புகுந்தது.
மேலும், தூத்துக்குடி-நெல்லை தேசிய நெடுஞ்சாலை உப்பாற்று ஓடை வழியாக பாய்ந்து ஓடிய வெள்ளம், தரைபாலத்தை அடித்துச் சென்றதில் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடைபட்டது. ஊருக்குள் வெள்ளம் புகுந்து 4 நாள்களாகியும் மாநகர் முழுவதுமே தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வந்து பார்வையிட்டு, ஆய்வு செய்து வருகின்றனர். அந்த வரிசையில், தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தூத்துக்குடி மாநகராட்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கிய அவர், செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர், “முத்துநகரை இன்று மூழ்கடிக்கப்பட்ட நகராக பார்க்க வேண்டியுள்ளது. வெள்ளத்தில் சிக்கிய மக்களை, ஆளுங்கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் முதல் முதல்வர் வரை யாரும் நேரில் சந்திக்கவில்லை. மக்களுக்கு என்ன தேவை என்பதை யாரும் கேட்கவில்லை. மீன்வளத்துறை அமைச்சராக உள்ள அனிதா ராதாகிருஷ்ணனே, வெள்ளத்தில் சிக்கி 3 நாள்கள் கழித்து மீட்கப்பட்டிருக்கிறார். அவரின் தொகுதியில் வெள்ளத்தால் என்னென்ன பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதுகூட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்குத் தெரியாதுபோல. இந்த நிலையில், நாளைய தினம் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டால், ‘எல்லா அமைச்சர்களும் நீச்சல் அடித்தாவது தூத்துக்குடி வந்து சேர் போட்டு அமர்ந்துவிடுவார்கள். ஆளும் அரசு நினைத்தால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் வரவழைத்து இங்கிருக்கும் பிரச்னையைத் தீர்க்க முடியும்.
இந்த வெள்ளத்தால் தூத்துக்குடி மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.1 லட்சம் நிவாரணமாக அரசு அறிவிக்க வேண்டும். 6 நாள்களாகியும் தூத்துக்குடியில் இன்றும் மின்சாரம் இல்லை. குடிக்க தண்ணீர் இல்லை. ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் இடுப்பளவு சாக்கடை நீர் தேங்கி உள்ளது. 150 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பாலம்கூட கம்பீரமாக நிற்கும்போது, சுமார் 25 வருடங்களுக்கு முன்பு கட்டிய தரைப்பாலம் மழைவெள்ளத்துக்கு அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதிலிருந்தே, இவர்கள் எல்லாம் ஊழல்வாதிகள் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. இவர்களின் அரசியல், தேர்தலுக்காகவும் ஓட்டுக்காகவும் மட்டும்தான். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்காமல், இந்தியா கூட்டணி பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். இங்குள்ள ஆட்சியாளர்களுக்கு அடுத்தக் கூட்டணி, அடுத்த தேர்தல், அடுத்த வெற்றி… இதுதான் இலக்காக இருக்கிறது. அவர்களின் இலக்கு மக்கள் இல்லை என்பது தெளிவாகப் புரிகிறது” என்றார்.
நன்றி
Publisher: www.vikatan.com
